Saturday, December 12, 2009

உங்கள் வீட்டில் திருட்டா?



முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சங்கம் கோயமுத்தூர்.
குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் - குறிப்புரை.

1. உங்களது வீட்டினை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்
பொழுது உங்களுக்குரிய காவல் நிலையத்தில் தகவல்
தெரிவித்து விட்டுச் செல்லவும்.

2. இரவு நேரத்தில் வீட்டின் முன் சிறிய விளக்கு எரியுமாறு
எற்பாடு செய்து விட்டுச் செல்லவும்.

3. வசதியுள்ளவர்கள் வீட்டில் Burglars Alarm இருக்குமாறு
ஏற்பாடு செய்துவிட்டுச் செல்லவும்.

4. வீட்டில் உள்ள நகைகளை வங்கி லாக்கரில் வைக்கும்
பழக்கத்தை கடைப்பிடிக்கவும்.

5. சமையல் எரிவாயு, மின்சாரத்துறை, கார்ப்பரேஷன்,
தொலைபேசி துறை ஆகியவற்றலிருந்து வருபவர்களின்
அடையாள அட்டையை சரிபார்த்து அனுமதிக்கவும்.

6. பொருட்கள் விற்க வரும் நபர்களை வீட்டினுள்
அனுமதிக்காதீர்கள்.

7. தங்க நகைகளை பாலிஷ் போடுவதாக கூறும் நபர்களை
நம்பாதீர்கள்.

8. இரவு நேரங்களில் வாகனங்களை வீட்டினுள் நிறுத்தி
பூட்டி வைக்கவும்.

9. பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தும் பொழுது
அதனுள் விலையுயர்ந்த பொருள்களை வைத்துச் செல்லாதீர்கள்.

10. பொது இடங்களில் உங்கள் மீது நரகல் தெளித்தால், கீழே
ரூபாய் நோட்டுகளைப் போட்டு உங்கள் கவனத்தை திசை
திருப்பி பொருட்களை களவாடிச் சென்று விடுவர் எச்சரிக்கை.

11. உங்களுடன் பேச்சுக் கொடுத்து நகைகளை பெற்றுக்கொண்டு
கல், மண் போன்றவற்றை பொட்டலமாகக் கொடுத்து
ஏமாற்றி விடுவர்.

12. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சீட்டுக் கம்பனி, தனியார்
நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.

13. வீட்டிற்கு அருகில் சந்தேகமான நபர்கள் குடிவந்தாலோ
அல்லது வீட்டினை நோட்டம் இட்டாலோ காவல் கட்டுப் பாட்டு
அறைக்கு (தொலைபேசி 100 க்கு) தகவல் தரவும்.

14. வேலைக்கு புதிய நபர்களை சேர்க்கும் பொழுது நபர்களைப்
பற்றி தீர விசாரித்து விட்டு நடவடிக்கை எடுக்கவும்.

15. பெண்கள் வீதியில் நடந்து செல்லும் பொழுது நகைகளை
ஜாக்கெட்டின் உட்புறம் பின்னில் சொருகி பாதுகாப்பாகச்
செல்லவும்.

16. போதிய வெளிச்சம் வந்த பின்பு பெண்கள் வீட்டிற்கு முன்
கோலம் போடவும். அப்போது சேலை முந்தானையால்
கழுத்தினை சுற்றி நகைகளை பாதுகாக்கவும்.

17. பொது இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும்
பொருட்களை வாங்கி சாப்பிடாதீர்கள். மயங்கினால் பொருட்கள்
களவு போய்விடும்.

18. இருசக்கர வாகனங்களின் அருகில் வரும் நபர்களை கண்
காணிப்பதுடன் உங்கள் நகைகளை பத்திரமாக பிடித்துக் கொள்ளவும்.
அவர்கள் அறுத்துக் கொண்டு செல்ல வாய்ப்பளிக்காதீர்கள்.

19.ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெண்கள் நகைகளை
அணிந்து கொண்டு செல்லாதீர்கள்.

20. பைகளில் நகைகளை வைத்துக்கொண்டு பஸ்ஸில் பயணம்
செய்யாதீர்கள்.

21. ஒரு மடங்கிற்கு இரு மடங்காக பணம் தருவதாக கூறும்
நபர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும்.

22. வாடகைக்கு குடி வருபவர்களைப் பற்றி தீர விசாரித்து
விட்டு குடி அமர்த்தவும்.

23. வீடு அல்லது நிலப் பத்திரங்களின் நகல்களை தெரியாத
நபர்களிடம் தர வேண்டாம்.

24. வீட்டின் முன்புறம், பின்புறம் கதவுகளை திறந்து வைத்து
விட்டு டி.வி. சீரியல்களில் மூழ்கி விட்டால் வீட்டில் உள்ள
பொருட்கள் களவு போய்விடும்.

25.வாகனங்களை திருட கள்ள சாவி போடும்பொழுது சைரன்
ஒலி எழும்புமாறு உள்ள சாதனங்களை பொருத்தி
பாதுகாக்கவும்.

பொது மக்கள் இக்குறிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறோம்.


முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சங்கம், கோயமுத்தூர்.


Wednesday, November 18, 2009

போலீஸ் சங்கம் என்ன செய்கிறது?



கோவை மாவட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
அதாவது இன்ஸ்பெக்டர் முதல் எஸ்.பி. வரை ஒரு
சங்கத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.
பதிவு எண்-192/2006. கடந்த சென்ற காலங்களில்
சங்கம் யாருக்கு என்ன செய்தது என்பதைக் காண்போம்.

14-12-2006 ல் ஒரு வக்கீல் பெண் காவலர் மீது மோதிய
வழக்கில் விசாரணைக்கமிசன் நடைபெற்ற போது கமிசன்
முன் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை சம்பவம்
எடுத்துச்சொல்லி அறிக்கை சமர்ப்பித்தது.

சென்னையில் சட்டக் கல்லூரியில் அடிதடி நடந்தபோது
காவலர்கள் வேடிக்கைபார்த்துக் கொண்டு மட்டும் இருந்
தனர் என்று மற்றவர்கள் புலம்பிய போது இந்த சங்கம்
அந்தக் காவலர்கிளின் கைகள் அரசியல் வாதிகளின்
ஆணையால் கட்டப்பட்டிருந்ததை பத்திரிக்கைகளுக்கு
விளக்கியது.

பிப்ரவரி மாதத்தில் உயர்நீதி மன்ற வளாகத்தில்
வக்கீல் களுக்கும் காவல் துறையினருக்கும் நடந்த
மோதலில் காவல் துறைக்கு உதவிக்கரம் கொடுக்க
யாரும் முன் வராதபோது இந்த சங்கம் குடும்பத்து
டன் தற்போது பணியில் இருக்கும் காவலர் குடும்
பஙுகளுடனும் நகரின் முக்கிய இடத்தில் ஒரு நாள்
தர்ணா இருந்து பத்திரிக்கை மீடியாக்களை
தன்வயம் இழுத்தது.

1998 ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் 58
அப்பாவி மக்களின் உயிறைக்குடித்தும் 250 க்கு மேல்
காயம் அடைந்த வழிக்கில் எஸ்.ஐ.டி. குழுவினர்
திறம்பட கடுமையாக உளைத்து 158 கோடூர குற்றவாளி
கழுக்கு தண்டனை பெற்றுத் தந்தனர். ஆனால் எஸ்.ஐ.டி
குளுவினரின் நற்பணியை அரசோ, காவல்துறையோ
கண்டு கொள்ளவும் இல்லை பாராட்டவும் இல்லை
அப்போது இந்த சங்கம் ஓய்வு பெற்ற காவல் துறை
இயக்குனரை வரவழைத்து அதில் பங்காற்றிய
அனைவரையும் கவுரவித்துப் பாராட்டிப் பத்திரங்களை
வழங்கியது. இது பத்திரிக்கைகளில் பரவலாக வியந்
தனர்.

கோவை மாநகரக்காவல் ஆயுதப்படை குடியிருப்பு
வளாகத்தில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு சில
ஆயிரம் ரூபாய்களுக்கு நல்ல அறிவை போதிக்கும்
புத்தகங்கள் வாங்கி அன்பளிப்பாக காவலரின்
குழந்தைகளின் அறிவு வளர்க்க அளிக்கப்பட்டது.

கோவையில் குளிர் காலங்களில் ஏழை அனாதை
கள் குளிரால் துன்பப்படுபவர்களுக்கும், அரசு
மருத்துவமனையில் குளிரில் நடுங்கும் வயோதிகர்
களுக்கும் பல ஆயிரம் ரூபாயில் போர்வைகள்
வாங்கி அவர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
இதில் செயலாளர் திரு.வேலு மற்றும் துணைச்
செயலாளர் திரு வெள்ளிங்கிரி இருவரும் சொந்தச்
செலவில் தரமான போர்வைகள் வாங்கி இரவில்
வண்டியில் நகர் மூழுதும் சுற்றி சாலை ஓரங்களில்
பேருந்து நிறுத்தங்களில் நடுங்கி உரங்கும் வழிப்
போக்கர்களுக்கு போர்வைகளைப் போர்த்தி வந்தனர்.
இது மனதை நெகிழ வைத்தது.

மேலும் கோவை மாநகராட்சி ஆர்.எஸ.புரத்தில்
ஒரு அனாதை விடுதி நடத்தி வருகிறது. அதில்
உள்ள அனைவருக்கும் ஒரு விழா ஏற்பாடு செய்து
உணவும் போர்வைகள், துண்டுகளும் அளிக்கப்பட்டது.
நகராட்சி கமிசினர் இச்சங்கத்தைப் பாராட்டிப்
பேசினார்.

இந்தச் சங்கம் தற்பொழுது அலுவலில் உள்ள காவலர்
மற்றும் அதிகாரிகளுக்காக முறையான சட்டத்திற்குட்பட்ட
எந்த செயலானாலும் அவர்களுக்காகத் தோழ் கொடுக்கும்
என்று இதன் தலைவர் திரு. இராஜசேகரன் தெறிவித்தார்.

-----------------------------(காவல் தொடரும்)


Friday, November 13, 2009

போலீசுக்கு சங்கமா?


சங்கம்


கோவை மாவட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்
அதாவது இன்ஸ்பெக்டர் முதல் எஸ்.பி. வரை ஒரு
சங்கத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.
பதிவு எண்-192/2006.

இந்த சங்கம் ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனிக்கிழமையன்று
ஹேமல்டன் போலீஸ் கிளப்பில் காலை 10.00 மணிக்கு ஒன்று
கூடி விவாதித்துப பிற்பகல் 1 மணிக்கு முடித்துக் கொள்வர்.

சங்கத்தின் பெயர்:- "முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம்"
"FORMER POLICE OFFICERS ASSOCIATION"

முகவரி:- ------------------------------------------
164, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர் - 641 018.
தொலை பேசி:-0422-2221993 ----------- செல்: -9842211993.
email:formerpoliceofficersassn.cbedt@gmail.com

'அன்பு--------------அமைதி------------------- சத்தியம்'

ஒருங்கிணைந்து உழைத்தோம்-ஒற்றுமையாக வாழ்வோம்.

10-10-2009 அன்று பொது உறுப்பினர் கூட்டம் நடத்தி அதில்
புதிதாக நிர்வாக உறிப்பினர்களைத் தேர்ந்தெடுத்து பொறுப்
பேற்றுக் கொண்டனர். அவர்கள் பெயர்கள் வருமாறு-

தலைவர்------------------எம்.இராஜசேகரன். (எஸ்.பி.)

உபதலைவர்--------------- ஏ.துரைசாமி. (எடி.எஸ்.பி.)

செயலாளர் ------------- என்.கே.வேலு. (எடி.எஸ்.பி.)

துணைச் செயலாளர் --- ஆர்.வெள்ளிங்கிரி. (டி.எஸ்.பி.)

பொருளாளர் ---------- ஏ.பாலகிருஷ்ணன். (டி.எஸ்.பி.)


செயற்குழு உறுப்பினர்கள்-

என். நாச்சிமுத்து. -----------------------(டி.எஸ்.பி.)

பி. ஈஸ்வரன்.---------------------------(டி.எஸ்.பி.)

கே.பரமேஸ்வரன்.--------(இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்)

ஏ.திருமூர்த்தி.------------(இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்)

என். சண்முகசுந்தரம்------(இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்)


இந்த சங்கம் கடந்த ஆண்டுகளில் செய்த நற்பணிகள்
உதவிகள் அடுத்து தொடரும்.


Friday, October 30, 2009

நல்ல தீர்ப்பு





நல்ல தீர்ப்புக்கோர் புகழ் மாலை.

கோவையில் இயங்கி வரும் முன்நாள் காவல் அதிகாரி
களின் சங்கத்தலைவர் திரு.எம். இராஜசேகரன் (S.P.)
அவர்கள் பத்திரிக்கைக்கு இன்று 30-10-2009 அளித்த குறிப்பு
விபரம் வருமாறு :-

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில்
நடந்த வக்கீல்கள் போலீசார் மோதல் சம்பந்தமான
சம்பவங்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்
அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.

---------------------அதில் வழக்கறிஞர், போலீசார் நல்லுறவு
சமுதாய நன்மை கருதி பேணிக்காக்கப் படவேண்டும்
என்று வலியுறுத்தப்பட்டுள்ளதை நாட்டின் நலனில்
நாட்டமுள்ள நல்லவர்கள் அனைவரும் வாழ்த்தி
வரவேற்பார்கள்.

-------------------அதில் உயர்நீதிமன்றத்தின் மாட்சிமை நிலை
நிறித்தப்படவேண்டும் என்றும், அதற்கு குந்தகம்
விளைவிப்போர் தண்டனைக்குரியவர்கள் என்றும்
கூறப்பட்டுள்ளதை நெஞ்சாற வரவேற்கிறோம்.

----------இரவும் பகலும் தங்கள் இன்னுயிரை பணயம்
வைத்து ஊணின்றி உறக்கமின்றி ஊருக்காக
உழைத்திடும் காவல் துறையினர் தங்கள் கடமையை
நிறைவேற்றும் பொழுது சில சமயங்களில் சற்றும்
எதிர்பாராத சூழ்நிலை கட்டாயத்திற்கு உள்ளாகி
அவர்கள் சக்திக்கும் மீறிய சில தவறுகள் நடந்துவிடுவது
உண்டு. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தண்டனைக்கு
இல்க்காகப்பட்டுள்ள கடமை உணர்வு மிக்க
கண்ணியமான காவல்துறை அதிகாரிகளின் நிலை மறு
பரிசீலனைக்கு உரியது என்று கருதுகிறோம்.

-------------அதே சமையத்தில் உச்ச நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட உச்ச தீதிமன்ற நீதியர்சர் ஸ்ரீகிருஷ்ணா
அவர்களின் தலைமையிலான விசாரணைக்குழு
அறிக்கையில் கீழ்கண்ட உண்மைகள் ஆய்ந்து
அறியப்பட்டு உச்ச நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்
பட்டுள்ளன;

------1. இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு
அயல்நாட்டு தீவிர வாத இயக்கத்தை ஆதரித்து
உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பல முறை மனித
சங்கிலிகள், உண்ணா விரதங்கள், ஆர்பாட்ட
ஊர்வலங்கள், ஆக்ரோஷ கோஷங்கள், கோர்ட்
புறக்கணிப்புக்கள் அதை மீறி கோர்ட்டில் ஆஜராகும்
கட்சிக்காரர்களுக்கு விசுவாசமான கடமையுணர்வு மிக்க
வக்கீல்களை மிரட்டி, தாக்கி வெளியேற்றுவது, இந்திய
அரசியலில் மிக முக்கியமான ஒரு அரசியல் தலைவரின்
உருவப்படத்தை தீயிட்டு கொழுத்துவது போன்ற சட்ட
விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது
வக்கீல்களில் ஒரு சிறிய கூட்டம்.

----2. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 17ம் தேதி
உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக
இரண்டு நீதிபதிகளின் முன்பாக விசாரணைக்கு
ஆஜராகியிருந்த ஒரு கட்சிக்காரரை அவதூறான
வார்த்தைகளில் திட்டி நீதிபதிகள் கண் எதிரில்
கோர்ட்டுக்குள்ளேயே, கோர்ட் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் வேளையில் கோஷமிட்டு, ஆர்பரித்து,
அழுகிய முட்டையால் தாக்கியது ஒரு சிறு வக்கீல்கள்
கூட்டம்.

-------3. அதன் உச்சக்கட்டமாக இரண்டு நாள் கழித்து
மேற்படி சம்பவத்தின் சம்பந்தமாக காவல்நிலையத்தில்
சரணடைய வந்தவர்களும், அவருடைய நண்பர்களும்
கொண்ட ஒரு கூட்டம் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்,
உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக உள்ள போலீஸ்
ஸ்டேஷனையே தீ வைத்து கொளுத்தி உள்ளே இருந்த
அனைத்து ஆவணங்களையும், டி.வி, கேமராக்கள் மற்றும்
பொருட்களையும் பத்திரிக்கையாளர் முன்னால் தீ
வைத்து பொசுக்கியது.

---------மேற்படி சம்பவங்கள் அனைத்தும் வரலாற்றுச்
சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின்
மாட்சிமையையும், கம்பீரத்தையும், கணிசமான அளவிற்கு
நாசப்படுத்திவிட்டது என்பது ஊரறிந்த உண்மை. அதில்
சம்பந்தப்பட்டவர்கள் யார் யாரென்பது அனைத்து
ஊடகங்களிலும் தத்ரூப காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு
சாட்சியங்களாக உள்ளன. உயர்நீதிமன்றத்தின் மாசு
குறைய மாட்சிமையை நாசப்படுத்தும் விதத்தில்
செயல்பட்ட அந்த சட்ட விரோதக் கூட்டத்தினர் மீது
உயர்நீதிமன்றத்தின் உத்திரவுப்படி நடக்கவுள்ள
விசாரணையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
பட்டு தகுதியான தண்டனை வழங்கப்படும் பொழுது
தமிழக காவல்துறையினரின் தளர்ந்து போன உற்சாக
உணர்வு தலைநிமித்தி நிலை நிறுத்தப்படும் என்று
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

(உதவி :- என்.கே.வேலு எ.டி.எஸ்.பி.)

-----------------------------(காவல் தொடரும்)

Sunday, August 23, 2009

ஆயுதப்படை பெண் எஸ்.பி., மீது செக்ஸ் புகார்

சென்னை,ஆக.23-
பெண் எஸ்.பி., மீது, பெண் காவலர் கொடுத்த
திடுக்கிடும் செக்ஸ் புகார் குறித்து, கூடுதல் டி.ஜி.பி.,
யின் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த ஆவடியில், தமிழ்நாடு
சிறப்பு போலீஸ் படையின் ஐந்தாவது
பட்டாலியன் உள்ளது. அதில் பணியாற்றும்
போலீஸ் காவலர் ராஜபாக்கியம் நேற்று கூடுதல்
டி.ஜி,பி., (நிர்வாகம்) லத்திகா சரணிடம் ஒரு புகார் அளித்தார்.
அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருப் பதாவது:

எங்களது பட்டாலியன் கமாண்டன்ட்டாக இருப்பவர் எஸ்.பி.,
வெண்மதி. இவர் வீட்டில் வேலை
செய்வதற்காக
‘ஆர்டலி’ யாக பெண் காவலர்கள் சுழற்சி
முறையில் செல்வது வழ்க்கம். சில நாட்களுக்கு
முன் நான், ஆர்டலி யாக சென்றேன். அப்போது, அவர்
குளிப்பதற்கு, ஒருதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு
வந்தார்.

குளிப்பதற்கு முன், தனக்கு எண்ணெய் ‘மசாஜ்’
செய்து விடச் சொன்னார். அவரைப் போலவே
எனது உடைகளையும் கழற்றச் சொல்லி வற்புறுத்
தினார். நான்உடைகளைக் கழற்றிய பின், எனக்கு
செக்ஸ் டார்ச்சர்கொடுத்தார். பின் அவரது கணவரும்
துண்டைக் கட்டிக்கொண்டு வந்தார். அவருக்கும்
இதே முறையில் மசாஜ் செய்துவிடவும், அவருக்கு
‘ஒத்துழைக்கவும்’ வேண்டும் என்று மிரட்டினார்.

உடனே நான், அங்கிருந்து வெளியேறி, ஊருக்குச் சென்று
விட்டேன். மீண்டும் வந்து பார்த்த போது, எனது அறை
பூட்டப்பட்டிருந்தது. ‘எஸ்.பி., யை பார்த்த பின்னரே பணியில்
சேர வேண்டும்’ என்று, சக போலீசார் கூறினர். அவரிடம்
சென்றால் எனக்கு மெமோ கொடுத்து, சம்பள உயர்வை
தடுத்து விடுவார். எனக்குப் பணி பாதுகாப்பு
அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்புகாரையடுத்து, கூடுதல், டி.ஜி.பி., லத்திகா சரண்
உத்திரவின்படி, தனிப்படை போலீசார், ஆவடி பட்டாலியன்
பெண் போலீசாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது
அவர்களிடம், ‘ஆர்டலி’ பணியில்
நியமிக்கப்படும் அனைத்து பெண் போலீசாரிடமும்
எஸ்.பி., வெண்மதி இதே முறையில் செக்ஸ் டார்ச்சர்
கொடுக்கிறார், அதை தட்டிக்கேட்டடல், மெமோ
கொடுக்கிறார்.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் மெமோ பெற்றால் எங்களது
சம்பள உயர்வே பபதிக்கப்படும். எனவே, மெமோவை
காட்டி மிரட்டியே பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்.
அவருக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு கொடுத்த
மெமோக்களால், 90 பேர் சம்பள உயர்வு பாதி
க்கப்பட்டுள்ளது’ என்று, பெண் போலீசார் புலம்பித்
தீர்த்தனர்.

இந்தப் புகார் குறித்து, எஸ்.பி., வெண்மதியிடம் கேட்ட
போது, “என் மீது கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டு
களும் தவறு. பணியில் ஒழுங்கீனம், கவனக்குறைவாக
இருப்பவர்களிக்கு மட்டுமே மெமோ கொடுத்தேன்.

கண்டிப்பாக நடந்து கொளவதால் தான், என் மீது இதுபோன்ற
அவதூறு புகார்களை கூறுகின்றனர். மற்றபடி நான் மனசாட்சி
யோடு தான் பணி புரிகிறேன். எனது தரப்பு நியங்களை உயரதிகாரி
களிடம் விளக்கி உள்ளேன்.” என்றார்.

இந்தச் செய்தி இன்று 23-8-2009 தினமலரில் வெளியிடப்
பட்டுள்ளது. இதிலிருந்து கேட்டகிரி 3 ல் ஆர்டர்லி முறை
அதாவது அதிகாரிகளின் வீடுகளுக்கு காவலர்கள் அனுப்பும் முறை
முழுதும் ஒழிக்கப்படவில்லை என்று தெறிகிறது.

அடுத்து கேட்டகிரி 3 க்கு கேட்டகிரி ஒன்றிலிருந்து
எஸ்.பி., யை கமேண்டண்டாகப் பதவி மாறுதல்
செய்யும் போது விரக்தியடைந்து இது போன்ற
கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார்கள். மேலும் விசா
ரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெறியலாம்.
காவல்துறையில் இது போன்ற மறு மலர்ச்சி
தேவையில்லை. நல்லது நடக்க மாற்றங்கள் தேவை.


------------------------------------------(தொடரும்)

Sunday, July 19, 2009

கேட்டகிரி 3ல் பதவி உயர்வு புலம்பல்.


கானல் நீராகும் பதவி உயர்வு தமிழக சிறப்பு போலீஸ் பரிதவிப்பு.

தமிழக சிறப்பு போலீசாருக்கு மட்டும் பதவி உயர்வு கானல் நீராக மாறி வருவதால், பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெற்று விடுகின்றனர்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள், எவ்வித தண்டனையும் இன்றி ஐந்தாண்டுகள் பணியாற்றினால் ஏ.சி.., யாக பதவி உயர்வு பெறலாம். ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் தேதி அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, பதவி உயர்வின் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழக சிறப்பு போலீஸ் படையில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு, அனைத்து தகுதிகள் இருந்தும், நான்காண்டுகளாக பதவி உயர்வு கிடைக்க வில்லை. பதவி உயர்வு பலனின்றி, பலரும் ஓய்வு பெறுகின்றனர்.

ஆண்டு தோறும் பட்டியல் செல்கிறதே தவிர, பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை, டி.ஜி.பி., ஐ.ஜி., அலுவகங்கள் மற்றும் தலைமைச் செயலகம் என, கோப்புகள் மாறிச்சென்றும், பலனில்லை. இதுவே மற்ற பிரிவுகளில் ஏ.சி., ஏ.டி.எஸ்.பி., என, பல்வேறு பதவி உயர்வுகள் வழங்கப்படுகிறது.

தமிழக போலீஸில் உள்ளூர் போலீஸ் (பிரிவு-1), மாவட்ட ஆயுதப்படை (2), மற்றும் சிறப்புக் காவல் படை (3), இயங்கி வருகிறது. முதல் இரண்டு பிரிவில் எப்போதாவது சில நேரங்களில் தண்டனைக்குள்ளான டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி பதவியில் உள்ளவர்கள், மூன்றாவது பிரிவான சிறப்பு காவல் படைக்கு இடமாற்றம் செய்யப் படுவதால், இங்குள்ளவர்கள் பதவி உயர்வு வாய்ப்பு கிடைக்காமலேயே ஓய்வு பெறுகின்றனர்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் அணியில் நீண்ட காலமாக ஏ.சி., பணியிடங்கள் இல்லாமலேயே நிர்வாகம் நடந்து வருகிறது. கடைசியாக 24 பேர் தகுதியிருந்தும், தலைமைச் செயலகம் வரைகோப்புகள் சென்றும் பதவி உயர்வு கிடைக்க வில்லை.

இது குறித்து போலீஸ் துறையைச் சேர்ந்த அதிகாரி கூறியதாவது:

தமிழக சிறப்புக்காவல் படையில் ஏராளமான காலிப் பணியிடங்கள், இருந்தும் தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை. தி.மு.க., ஆட்சி போலீசாருக்கு பொற்காலம் என்று சொல்வதுண்டு. தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

தமிழக சிறப்புக் காவல் படையில் சேர, 1980ல், எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.

தற்போது எஸ்.எஸ்.எல்.சி., தேறாதவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் ஓய்வு பெறும் தருவாயில் உள்ளனர். சிறப்பாக சேவை புரிந்த இவர்களுக்குபதவி உயர்வு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(நன்றி தின மலர்.)

---------------------------------------------(தொடரும்)

Thursday, July 16, 2009

சாதனைமேல் சாதனை கோவையில்!


கோவை மாநகரப் போலீஸ் கமிஷனர் திரு.பி.சிவனாண்டி ஐ.பி.எஸ்., அவர்கள் கோவை மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்கள் அவர்களது ஏரியாவில் ஏழையாக உள்ள 5 வது படிக்கும் மாணவ, மாணவிகளை ஒவ்வொரு காவல் நிலையமும் இரண்டு பேருக்குக் குறையாமல் தத்தெடுத்து அவர்களது கல்லூரிப்படிப்பு முடியும் வரை தொண்டு நிறுவனங்கள் மூலம் கல்வி உதவித் தொகை அளித்து பட்டதாரிகள் ஆக்க வேண்டும் என்று செயல் படுத்தியுள்ளார். அதற்காக நடைபெற்ற விழா ஒன்றில் 15-7-2009 அன்று ரூ.2.42 லட்சம், 36 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். இந்த கல்வி உதவித் தொகை தன்னார்வம் கொண்டவர்களும், தொண்டு நிறுவனங்கள் மூலமும் பெற்று முறைப்படி கணக்கு வைத்துப் பராமறிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவ்வாறு உதவி செய்யும் போது பொது மக்களுக்கும் காவல் துறைக்கும் உள்ள உரவு பன் மடங்கு அதிகரிக்கும் என்றார். கோவை மாநகரில் ஐ.ஜி அவர்களின் சாதனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. இவை காவல் துறையில் மறுமலர்ச்சிதானே!


---------------------------------------------(தொடரும்)

Tuesday, July 7, 2009

‘மக்களைத் தேடி’ கோவை மாநகரிலும் தொடருமா?


கோவை சரகத்தில் புதுமையை ஏற்படுத்திய டி.ஐ.ஜி., திரு.சிவனாண்டி, ஐ.பி.எஸ்., அவர்கள் ஐ.ஜி யாகப் பதவி உயர்வு பெற்று 6-7-2009 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்று அளித்த பேட்டி:-

“மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக தீர்வு காணப்படும். நகரில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க இரவு பகல் பாராமல் போலீசார் முழு வீச்சில் செயல்பட, போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். புகார் மனுக்களுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் பொதுமக்களை, போலீசார் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும், குற்றகளை கேட்டு உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும்.

போலீஸ் ஸ்டேசனில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை யெனில், உதவி கமிஷனர், துணைக் கமிஷனரிடம், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்கும் நடவடிக்கை இல்லையெனில், என்னை தொடர்பு கொள்ளலாம், சம்பத்தப் பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரரின் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும். மேலும், புறநகரில் செயல் பட்டு வந்த ‘வீடு தேடி எப்.ஐ.ஆர்., வழங்கும் பணி’ நகரிலும் அமல்படுத்தப்படும்.

மாநகர போலீஸ் எல்லையின் சுற்றளவு 10 கி.மீ.,ருக்குள் தான் உள்ளது, இதில், 15 ஸ்டேசன்கள் செயல் படுகின்றன. எனவே, இத்திட்டத்தின் மூலம் அதிக பட்சமாக 30 நிமிடங்களில் புகார்தாரரின் வீட்டுக்குச் சென்று எப்.ஐ.ஆர். நகல் தர முடியும். இத்திட்டம் உடனடியாக செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நகரில் நாள்தோரும் நடக்கும் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்படும், கூடுதல் போலீசார் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். இருப்பினும், பொதுமக்களும் சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். பொதுமக்களின் குறைகளைக் கேட்க, 15 நாட்களுக்கு ஒரு முறை கமிஷனர் அலுவலகத்தில் குறை கேட்கும் முகாம் நடத்தப்படும். இம்முகாமில், பங்கேற்கும் பொது மக்கள் தாங்கள் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து நேரில் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்க போலிஸ்சார் தயக்கம் காட்டியதாகவோ அல்லது தட்டிக்கழித்த தாகவோ தெரிந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

---------------------------------------------(தொடரும்)

Sunday, June 28, 2009

போலீஸ் பணிக்கு 4,000 பேர் தேர்வு.


தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், போலிஸ் பணிக்கு 4,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு 2,800 ஆண்களும், 1,200 பெண்களும் தேர்ந்தெடுக்கப்கடுவர். இப்பணிக்கு 29-7-2009 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் தான் எழுதி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் 150 ரூபாயிக்கான டிமாண்ட் டிராப்டை அனுப்ப வேண்டும். அதனுடன் ஆறு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய, சுயமகவரியிட்ட தபால் உறையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு 25-10-2009 தேதி நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்ற பின் அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உடல் கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறிவுத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வு பொது அறிவு 50 மதிப்பெண், உளவியல் 30 மதிப்பெண் என இருபிரிவாக 80 மதிப்பெண்களிக்கு இருக்கும். எழுத்துத் தேர்வில் குறைந்த பட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

முழு விபரம் அறிய நேற்றைய (27-6-2009) தின மலர் பார்க்கவும்.

தகவல் அறிந்து பயன் பெர வேண்டி.

கோவை
28-06-2009.
--------------------------------------(காவல் தொடரும்)

Tuesday, June 9, 2009

கோவை சரகத்தில் மறுமலர்ச்சி



கோவை சரக டி.ஐ.ஜி. திரு.சிவனாண்டி, ஐ.பி.எஸ்., அவர்கள் கடந்த வருடம் 2008 ல் அக்டோபர் மாதத்தில் “மக்களைத் தேடி” என்ற மறுமலர்ச்சித் திட்டத்தை கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டக் காவல் துறையில் துவக்கி வைத்தார். இதில் புகார் அளித்த மக்களின் வீட்டுக்குச் சென்று எப்.ஐ.ஆர்., நகல் வழங்குவது. தற்போது இத்திட்டம் மீண்டும் செயல் பாட்டுக்கு வந்துள்ளது. திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட எந்த ஒரு சம்பவமானாலும் பொது மக்கள் வீட்டிலிருந்த படியே, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு போனில் தெரிவிக்கலாம். போலீசார் நேரடியாக வந்து புகார் பெற்று நடவடிக்கை மேற்கொள்வர். எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வந்து அளிக்கப்படும். போனில் தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் வர வில்லை என்றால்.. நிவாரணம் கிடைக்க வில்லை என்றால்.. கோவை டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நேற்று (8-6-2009) திறக்கப்பட்ட “உதவி மையம்” ல் தொடர்பு கொண்டு 0422-3239494 அல்லது 94454 92368 என்ற எண்ணில் முறையிடலாம். புகார் பதிவு செய்து தேவையான உத்திரவுகளை பிறப்பிக்க அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு டி.ஐ.ஜி., கோவை சரகம் திரு சிவனாண்டி., ஐ.பி.எஸ்., அவர்கள் கூறியுள்ளார்கள். கோவையில் காவல் மறுமலர்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

(நன்றி தினமலருக்கு)

--------------------------------------(காவல் தொடரும்)

Sunday, June 7, 2009

“எக்ஸ்ட்ரா டிரில்?’



“எக்ஸ்ட்ரா டிரில்’ என்றால் கேட்டகிரி இரண்டாம் காவல் பிறிவில் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை சிறு தண்டனைக்காக ஆயுதப்படை ஆய்வாளரால் அளிக்கப்படும் ஒரு தண்டனை, கூடுதல் கவாத்து என்று பெயர். இதற்கென்று ‘Minor Puhishments Register’ என்ற சிறுதண்டனைப் பதிவேடு - ஓராண்டிற்கானது - ஒவ்வொரு பிறிவிலும் இருக்கும். இது காவலர்கள் ஒரு குறிப்பிட்ட அலுவலுக்கு, அல்லது அலாரம் காலுக்கு காலதாமதமாக வருதல் போன்ற சிறு தவறுகள் செய்பவர்களை ஆய்வாளர் நேர் முக அறையில் உதவி ஆய்வவளர் ஆஜர்படுத்துவார். ஆய்வாளர் அதை நேரில் விசாரித்து உண்மையான காரணம் அறிந்து அதற்குத் தக்கவாறு சிறு தண்டனைகள் அளித்து அந்தப் பதிவேட்டில் பதிவு செய்வார். சில சமயம் அந்த நேர்முக அறையில் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் அதில் அவரை மன்னித்தும் பதிவு செய்வார். இதில் வழங்கப்படும் தண்டனைகள் மணிக்கணக்கில் வழங்கப்படும். அதை உதவி ஆய்வாளர் ‘ஆர்டர்லி சார்ஜண்டிடம்’ அனுப்பி வைப்பார். அவர் அந்த தண்டனையை ஒரு என்.சி.ஓ. மூலம் காலை 11 மணி முதல் 12 மணிவரை டம்மி துப்பாக்கியுடன் நிறுத்தாமல் மைதானத்தில் எடுக்கப்படுவார். அதை பொது நாட்க்குறிப்பில் பதிவு செய்யப்படும். இது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே கூடுதல் கவாத்து எடுக்கப்பட வேண்டும். 3 மணி நேரம் என்றால் 3 நாட்கள் எடுக்கப்படவேண்டும். இது பி.எஸ்.ஓ வில் உள்ளது.

கடந்த 03-06-2009தேதி தின மலரில் தர்மபுரி ஆயுதப்படைக்காவலர் ஒருவர் கவாத்து துப்பாக்கியுடன் செய்வது போன்ற போட்டோ போட்டு அவர் அனுமதியின்றி இரவில் பயிற்சிக்காவலரை அரசு மோட்டர் சைக்கிளில் ஏற்றி வந்ததை எஸ்.பி. பார்த்து 3 மணி நேர கூடுதல் கவாத்து அளித்து அதை ஒரே நேரத்தில் செய்ய ஆணையிட்டதால் செய்கிறார் என்று போட்டிருந்தது. இது தான் கேட்டகிரி இரண்டிற்கு எஸ்.பி. செய்யும் காவல் மறுமலர்ச்சியா? நடக்கக் கூடாது ஒரு பேச்சுக்காக. அந்தக் காவலரை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதை அவர் எண்ணி வருத்தப்பட்டு உயிர் போக்கிக் கொண்டாலோ, மயங்கி விழுந்து உயிர் பிறிந்தாலோ யார் பொறுப்பாவார்? தண்டனை அளிப்பவர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

(நன்றி தினமலருக்கு)

--------------------------------------(காவல் தொடரும்)

Monday, June 1, 2009

சிறைத்துறையில் மறுமலர்ச்சியா?


இன்று (1-6-2009) மாலை 4-30 மணிக்கு கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் ( பி.ஆர்.எஸ்) சிறைத்துறையில் பணியாற்றத் தொடங்கவுள்ள ‘வார்டன்’ களுக்கு பயிற்சி நிறைவு நாள் விழா தமிழ் நாட்டில் முதல் முறையாக இங்கு நடைபெற்றது. இதில் மொத்தம் 265 பேர்களுக்கு காவல் துறையினரால் ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் சிறைத்துறை ஒழுங்கு முறைச் சட்டங்கள் மற்றும் காவலர்களுக்கு அளிக்கும் பயிற்சி போன்றே சிறப்பாக அளிக்கப்பட்டது. இந்த மறுமலர்ச்சிப் பயிற்சியை ஏற்படுத்தியவர் திரு.ஆர். நடராஜ், ஐ.பி.எஸ் சிறைத்துறை இயக்குனர் (டி.ஜி.பி.) சென்னை அவர்கள் ஆவார். இவர் காவல் துறையில் கேட்டகிரி ஒன்றில் பணியாற்றியவர். இவர் சிறைத்துறையில் இயக்குனர் ஆன பின்புதான் பல மாற்றங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திக் காட்டியவர். அந்த மாற்றங்களில் மறு மலர்ச்சியாக வார்டன்களுக்கு காவல் துறையினரால் பயிற்சி அளிக்க ஏற்பாடுசெய்தது. எண்ணற்ற மாற்றங்களைச் செய்து கொண்டுள்ளார். சிறையில் உள்ள கைதிகளை கைதி என்று அழைக்காமல் இல்லவாசிகள் என்று அழைக்கப்படுகின்றனர், ஞாயிறு நாட்களில் சிறையில் உள்ளவர்களைப் பார்க்க அனுமதித்தது. படிக்க ஏற்பாடு செய்தது, உள்ளிருப்பவர்களின் குடும்ப நலன் பேணுவது போன்ற பல மாற்றங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்தியா முழுவதும் 114 மத்திய சிறைகள், 27 திறந்த வெளிச் சிறைகள் உள்ளன. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் 3 திறந்த வெளிச்சிறைள், மொத்தம் 134 சிறைகள் உள்ளன.

இந்த கோவை காவலர் பயிற்சிப்பள்ளியின் முதல்வர் கீழே உள்ள படத்தில் இருக்கும் திரு.சிங்காரம் (எடி.எஸ்.பி.) அவர்கள். அவர் கேட்டகிரி இரண்டைச்சேர்ந்தவர். அவர் தான் இந்த புதிய பயிற்சியின் ஊன்றுகோல் போன்று சிறம்பட செயல் பட்டு பயிற்சி நிறைவடையச் செய்தவர். சிறைத்துறை இயக்குனர் பேசும் போது ஒரு வார்த்தை கூட அவரைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் சென்னையில் உள்ள பி.டி.சி. முதல்வரைப் பற்றித்தான் பேசினார். அவர் திரு. சண்முகராஜேஸ்வரன், ஐ.பி.எஸ்., கேட்டகிரி ஒன்றைச் சேர்ந்தவர். அவருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த பாராபச்சம் ஏன்? உழைப்பவனை விட்டு உட்கார்ந்திருப்பவனைப் புகழ்வது போல் இச்செயல் உள்ளது. கனம் சிறைத்துறை இயக்குனர் அவர்கள் இச்செயலை சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன். நானும் அந்த நிறைவு விழாவுக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். மறு மலர்ச்சிகள் மேலும் மாற வேண்டும்.

--------------------------------------(காவல் தொடரும்)


Thursday, May 7, 2009

‘மாப் ஆப்பரேசன்’

இந்த ‘மாப் ஆப்பரேசன்’ என்பது காவல்துறையில் கேட்டகிரி இரண்டிலும், மூன்றிலும் உள்ள ஒரு பணி தான். மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் உத்திரவுப்படி தயார் நிலையில் உள்ள காவலர்களும் அதிகாரிகளும் உடனே சட்ட விரோதமான கூட்டம் கூடியுள்ள இடத்திற்கு காவல் வாகனத்தில் செல்வார்கள். அந்த நிகழ்வுக்கென தனி உடைகளும் உபகிரணங்களும் இருக்கும். தலைக்கவசம், கேடையம், லத்தி தடி, கண்ணீர்புகை கிரின்னேடுகள், கேஸ் ஙன்கள், செல்கள், முதலுதவிப்பெட்டி, ஸ்டெரச்சர், மெக்காபோன், எச்சரிக்கை எழுத்துள்ள துணிக் கொடி, பியூகில் மற்றும் .303 துப்பாக்கி தோட்டாக்கள் சகிதம் செல்வார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் சட்ட விரோதமான கூட்டம் கூடக்கூடாது என ஆணை பிரகடனப் படுத்தியிருந்தும் அதை சட்டை செய்யாமல் மீறி கூட்டம் கூடி பொது சொத்துக்கு பங்கம் விழைவித்தும், காவல் துறையையும், அல்லது நிர்வாகத்தினறையும் தரக்குறைவான வார்த்தைகளைல் கோசம் எழுப்பிக் கொண்டு ஆயுதம், ராடு, தடிகளுடன் மூன்னேறி வரும் கும்பலுக்கு முன்னால் சுமார் 100 கஜம் தூரத்தில் இந்த மாப் ஆப்பரேசன் பார்ட்டி முறைப்படி அணிவகுத்து நிற்கும். அங்கு காவல் முக்கிய அதிகாரியும், வருவாய்த் துறை அதிகாரியும், அணிநடத்தும் அதிகாரியும் இருப்பார்கள்.

இந்த அணியில் முன்னால் நிற்பது கண்ணீர்புகை உபயோகிக்கும் அணி, அடுத்து மூன்று வரிசை லத்தி அணிகள் இறுதியில் சிறு குழுவான துப்பாக்கி அணியும் முதலுதவிக் குழுக்கழும் இருப்பார்கள். குழு நடத்தும் ஆயுதப்படை அதிகாரி உயர் அதிகாரியிடம் உத்திரவு பெற்று ஒரு பியூகில் ஊதுபவரை நீண்ட ஒலி எழுப்பச்சொல்லி கூட்டத்தின் கவனத்தைத் திருப்பி ‘நீங்கள் கூடியருப்பது சட்டவிரோதமான கூட்டம் உடனே கலைந்து போங்கள் இல்லாவிட்டால் கண்ணீர் புகை உபயோகித்துக் கலைக்க நேரிடும் ஓடிப்போங்கள் ! ஓடிப்போங்கள் !! ஓடிப்போங்கள்!!!’ என்று மெக்கா போன் மூலம் எச்சரிப்பார். பின்னால் இருவர் எச்சரிக்கைக் கொடியை உயர்த்திப் பிடிப்பார்கள். அவர்கள் கலைந்து போகாவிட்டால் கண்ணீர் புகை கிருனேடுகளை வீசுவார்கள், பின் கேஸ்ஙன் மூலம் செல்களை 45 டிகிரி கோணத்தில் வைத்துச் சுடுவார்கள். அது கூட்டத்திற்குள் விழுந்து புகை மண்டலம் உண்டாக்கிக் கண்எறிச்சலை உண்டாக்கும். அதற்கும் கூட்டம் கலையாவிட்டால் பியூகில் மூலம் நெடும் ஒலி எழுப்பி ஒரு காவலர் சிறிது முன்நேறி ‘‘நீங்கள் கூடியருப்பது சட்டவிரோதமான கூட்டம் உடனே கலைந்து போங்கள் இல்லாவிட்டால் லத்தியால் அடித்துக் கலைக்க நேரிடும் ஓடிப்போங்கள்! ஓடிப்போங்கள்!! ஓடிப்போங்கள்!!!’ என்று எச்சறித்து விட்டு அதிகாரியின் உத்திரவுப்படி மூன்று வரிசை பிரிவுகளும் கூட்டத்தை நோக்கிச் சென்று அடிப்பார்கள். அடித்துக் கொண்டு அலைபோல் வந்து கொண்டிருப் பார்கள். அதற்க்கும் கூட்டம் கலையவில்லை யென்றால் நடத்தும் அதிகாரி ஆணைப்படி பியூகில் ஊதுபவர் டட் டட் டட் டட்டா. .... .. . .. என பலமுறை தொடர்ந்து ஒலிக்கும் பொழுது அடித்துக் கொண்டிருந்தவர்கள் திரும்பி வந்து துப்பாக்கிக் குழுவுக்கு இடது, வலது, பின்பக்கமென அணியாக நின்று வெளிப்பக்கம் பார்த்து அவர்களுக்குக் காவலாக நிற்பர்.

துப்பாக்கிக் குழு இரு வரிசையாக சிறிது முன்னே சென்று அதன் அதிகாரி ஆணைக்கேற்ப முன் வருசைக்குப் பின்னால் இரண்டாவது அணிமுன் இருவருக்கிடையே பைனட் பொருத்தி நின்று துப்பாக்கியில் தோட்டா லோடு செய்வார்கள். அதிகாரி வலது பக்கம் உள்ள காவலரை கூட்டத்தை எச்சரிக்கும் படி சொல்வார். அவர் 5 அடி முன்னால் சென்று மெக்கா போன் மூலம் ‘‘நீங்கள் கூடியிருப்பது சட்ட விரோதமான கூட்டம் உடனே கலைந்து போங்கள் இல்லாவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக் கலைக்க நேரிடும் ஓடிப்போங்கள்! ஓடிப்போங்கள்!! ஓடிப்போங்கள்!!!’ பின் உத்திரவு பெற்று குழுவிற்குப் பின்னால் நின்று கூட்டத்தில் முக்கிய ஆளை சுடும்படி ஒரு காவலரைத் தொட்டு உத்திரவு கொடுப்பார். அந்தக் காவலர் குறிதவராமல் சுடுவார். அந்தக் குறிப்பிட்டவர் குண்டடி பட்டு கீழே விழுந்தவுடன் கூட்டம் கலைந்து ஓடுவார்கள். உடனே முதலுதவி பார்ட்டி முன்னோக்கிச் சென்று அடிபட்டவருக்கு முதலுதவி செய்வார்கள். அப்பொழுது இரு துப்பாக்கி வீரர்கள் உடன் இருப்பர், ஸ்டெச்சரில் எடுத்து வந்து மருத்துவ மனைக்கு உடனே அனுப்பி வைப்பர்
பின் நிறைவு செய்து ஆயுதப்படை அதிகாரி ஒரு மினிட் அரிக்கையை அங்குள்ள உயர் அதிகாரிக்குக் கொடுப்பார். அதில் மாப்ஆப்பரேசன் பற்றிய முழு விபரம் இருக்கும்.

ஆனால் தற்போது கூட்டத்தைக் கலைக்க தண்ணீர் பீச்சியும், ரப்பர் தோட்டாக்கள் பயன் படுத்தியும் கலைக்கிறார்கள். மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

--------------------------------------(காவல் தொடரும்)

Friday, April 24, 2009

மனித நேயம்


தினமலர்-கோவை தேதி 23-4-2009 ல் காவல் துறை உயரதிகாரி திரு சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். சொன்னது.

இரவு 10 மணிக்கு, முகப் பேரிலிருக்கும் என் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். மதுரவாயல் அருகே வந்துகொண்டிருக்கும் போது, சாலையோரம் ஒரு கூட்டம். என்ன வென்று காரை நிறுத்திப்பார்த்தால், ஒரு மனிதர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அப்போதுதான் அந்த விபத்து நடந்திருக்கிறது.

டிரெய்லர் லாரி அடித்து, இழுத்துக் கொண்டு போனதில் அவருக்கு பலத்த காயங்கள். கால் துண்டாகி தொங்கிக்கொண்டிருந்தது. சுற்றியிருப்பவர்கள் யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. நான் உடனே ஆம்புலன்சுக்குப்போன் செய்தேன். அடிபட்டவர், தான் ஒரு வக்கீல் என்று மெல்ல சொன்னார். நிமிடங்கள் ஓடின. ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆட்டடவை நிறுத்தி, அடிபட்ட வக்கீலைத் தூக்கிப் போட்டு, உடன் என் கான்ஸ்டபிளையும் ஏற்றினேன். நான் காரில் முன்னே பைலட் போல செல்ல, ஆட்டோ பின்னால் வேகமாக வந்தது. அதற்குள் மருத்துவ மனைக்கு தகவலைச் சொல்லி விட்டேன்.

அங்கே போய்வக்கீலை ஐ.சி.யு. வில் சேர்த்தோம். அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. இன்னொரு பெரிய மருத்துவமனையில் அந்த அரியவகை ரத்தம் இருப்பதை அறிந்து, அந்த மருத்துவ மனைக்கு விரைந்தோம். அங்கே சென்ற போது இரவு இரண்டு மணி. இதற்கு இடையே அந்த வக்கீல் வீடிற்குத் தொடர்பு கொண்டுதகவல் கொடுத்தோம்.

மொத்தம் எட்டு ஆப்பரேசன் செய்தால் தான் காலைக் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை. நிறைய ரத்தம் வேண்டி இருந்தது. சில பேருக்கு மட்டுமே இருக்கும் அந்த அரிதான,’ஏ’ நெகடிவ் வகை குரூப் கொண்ட விஜயகுமார் என்ற காவலர் சத்தியமங்கலத்தில் இருப்பது எனக்குத் தெரியவந்தது.

உடனே அவரை சென்னைக்கு வரச்சொன்னேன்.அதே போல், இங்கே சிட்டிபாபு என்ற காவலரையும் வரச்சொன்னேன். அவர்களும் காலையிலேயே வந்து விட்டனர். பிறகு, ஆப்பரேஷன் செய்து அவரது உயிரையும், காலையும் காப்பாற்றினோம். மனிதனுக்கு மனிதன் உதவி வாழ்வதுதான் வாழ்க்கை.

--------------------------------------(காவல் தொடரும்)
---------------------------------------------------------------------------

Saturday, April 11, 2009

சென்னை கலவரம்-வக்கீல் சஸ்பெண்டா?


6. சென்னைக் கலவரம் பற்றி முன்னாள் காவல் அதிகாரிகள் சங்கம், கோவை 21-3-2009 அன்று தினத் தந்தியில் அளித்த அறிக்கையின் நகல்.

சென்னையில் கலவரத்தில் ஈடுபட்ட
வக்கீல்களின் தொழில் உரிமத்தை
‘சஸ்பெண்டு’ செய்ய வேண்டும்

முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறித்தல்

கோவை, மார்ச்.21- சென்னையில் கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களின் தொழில் உரிமத்தை ‘சஸ்பெண்டு’ செய்ய வேண்டும் என்று, முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக கோயமுத்தூர் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்க செயலாளர் என்.கே.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

போலீஸ் நிலையம் தீக்கிரையான சம்பவம்

கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் நடந்த கலவரம் சம்பந்தமாக ஏற்கனவே இடம் மாற்றி பணியமர்த்தப்பட்டு இருந்த 2 போலீஸ் அதிகாரிகளை சம்பவத்தின் போது சரிவர பணி புரியவில்லை என்ற காரணத்திற்காக தற்காலிக நீக்கம் (சஸ்பெண்டு) செய்யவும், ஏனைய வரம்பு மீறிய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்திரவிட்டுஉள்ளது. அதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறெந்த மார்க்கமும் அந்த அலுவலர்களுக்கு இல்லை. அவர்கள் அந்த தண்டனைக்குறிய குற்றங்களைச் செய்துள்ளனர் என்று ஐகோர்ட் கருதினால் அதை அவர்கள் அனுபவிக்கட்டும்.
ஆனால் அதே பிப்ரவரி மாதம் 19- ந்தேதி வன்முறையில் இறங்கிய வக்கீல்கள் குழு ஒன்று ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொழுத்தியது. காவல் நிலையம் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ்காரர்களுக்கு சொந்த மான வாகனங்களை தீக்கிரையாக்கியது. போலீஸ் துறையினரையும், தீயணைப்பு படையினறையும் தாக்கியது. மேலும் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தியது. இவை அனைத்தும் ஊர் அறிந்த நிகழ்வுகள்.

முன்னாள் மந்திரி மீது
முட்டை வீச்சு

அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஒருவர் , கோர்ட்டு ஹாலுக்குள் 2 நீதிபதிகள் முன் ஆஜராக இருந்தபோது வக்கீல்களில் ஒருசிலர் அவரை ஆபாசமாகத்திட்டி அழுகிய முட்டையால் அடித்து ஆர்ப்பாட்டம் செய்து அசிங்கப்படுத்தினார்கள். அதை தடுக்க குறுக்கிட்ட போலீஸ் துறையினரையும் தாக்கினார்கள். அதற்கு முன்பாக ஒரு போலீஸ் அதிகாரியைப்பிடித்து சீறுடையை களையச் செய்து அவமானப் படுத்தினார்கள். அரசுத் தரப்பு வக்கீல் அலுவகத்தில் பணி நிமித்தமாக வருகை தந்த போலீஸ் அதிகாரி ஒருவரை காரணமின்றி தாக்கி காயப்படுத்தினார்கள். கடந்த சில காலமாக ஐகோர்ட்டு வளாகத்திற்குள் ஊர்வலங்கள், கொடும்பாவி எரிப்பு, ஆர்பாட்டங்கள், ஆக்ரோஷ கோஷங்கள், ஆபாச சொற்பொழிவுகள், பலவந்தங்கள், பயமுறுத்தல்கள், சண்டைகள், சவால்கள், மறியல், புறக்கணிப்பு, உண்ணாவிருதம், பணிசெய்யும் வக்கீல்களை பலவந்தப்படுத்தி வெளியேற்றுதல் போன்ற பல வகையான விதிமுறை மீறிய செயல்களை செய்து நீதிமன்ற அலுவல்களை காலவறையின்றி முடக்கி வைத்தனர். இந்த ஆண்டு மட்டும் 77 நாட்களில் 66 நாட்கள் ஐகோர்ட்டு பணிகள் முடக்கப்பட்டன. பிப்ரவரி 19 கலவரம் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்குழு அறிக்கையை பகிரங்கமாக தீவைத்துக் கொழுத்தி சுப்ரீம் கோர்ட்டையே வக்கீல்கள் குழு ஒன்று அவமதித்து, சுப்ரீம் கோர்ட்டு, ஐக்கோர்ட்டு, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் சேவை அமைப்பினர் விடுத்த உருக்கமான வேண்டு கோள்களை உதாசீனப்படுத்தி, கோர்ட்டு அலுவல்களை மாதக்கணக்ககல் நடைபெறாமல் முடக்கி வைத்து நீதித்துறைக்கும், அரசுக்கும் அபரிமிதமான கால நஷ்டத்தையும் பொருள் நஷ்டத்தையும் கவுரவ நஷ்டத்தையும், ஏற்படுத்தினார்கள்.

உரிமத்தை சஸ்பெண்டு
செய்ய வேண்டும்.

அனைத்து குடிமக்களின் வரிப்பணத்தில் அவர்களது சேவைக்காக இயங்குவது நீதித்துறை. அதை நடக்க விடாமல் முடக்கிவைப்பது மக்களுக்கு எதிரான சட்ட விரோத, சமூக விரோத, தொழில் தர்மத்திற்கு எதிரான தார்மீகமற்ற செயல். மக்களால் மன்னிக்க முடியாத இத்தனை குற்றங்களையும் செய்தவர்கள் யார்-யார்? என்பது தெள்ளத்தெளிவாக எல்லா ஊடகங்களிலும், போட்டோக்களிலும், வீடியோக்களிலும் பதிவாகி சாட்சிகளாக உள்ளன. அவர்கள் யார்-யார்? என்பதை கண்டறிவதில் எந்த சிரம்மும் இல்லை.

அவர்கள் யார்-யார்? என்பதை கண்டறிந்து போலீஸ் அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்த்து போல், சம்பந்தப்பட்ட வக்கீல்களின் தொழில் உரிமத்தை உடனடியாக தற்காலிக நீக்கம் செய்து சகல சட்டப் படியான நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் செய்த அத்தனை குற்றங்களையும் உரிய தண்டனைக்கு உள்ளாக்க ஐகோர்ட்டு தன்னிச்சையாக உத்திரவிட்டு நீதியின் முன் எல்லோரும் சமம், என்கின்ற சத்தியத்தின் கட்டளையை நிலை நிறுத்த வேண்டும் என்ற இந்த மாநிலத்தின் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

--------------------------------------(காவல் தொடரும்)

Saturday, March 14, 2009

ஆயுதப்படை அலுவல்.

ஆயுதப்படை என்ற கேட்டகிரி 2 ன் காவல் பிரிவு ஒரு அடிமைப் பட்டாளம் போல் உள்ளது. அதை கவனிக்க மேல் அதிகாரிகளே கிடையாது. மாற்றாந்தாயின் குழந்தையைப் போல அவர்களின் குடும்ப நலன் பேண யாரும் அதிக அக்கரை கொள்வதில்லை. ஆயுதப்படை அதிகாரிகள், காவலர்கள் ஒரே மாதிரியான பணிகளைச் செய்து அலுத்து விட்டார்கள். அது அவர்களுக்கு மன உழச்சலைக் கொடுக்கிறது.

அந்தக்காலத்தில் கோவை, மதுரை, மங்களூர் ஆகிய இடங்களிலிருந்து கைதிகளை வேறுபட்ட வழக்குகளுக்காக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டி வழிக்காவல் அலுவல் செய்தனர். பின் பல்வேறு வழிக்காவலுக்காக அதிகாரிகளும் காவலர்களும் பயன்படுத்தப் பட்டனர். பின் காலப்போக்கில் அமைச்சர்கள் வெளியில் செல்லும் போது வழிக்காவல் செய்தனர். அடுத்து பெரும் தொகையான பணம் ‘ரிசர்வ் வங்கி’ யிலிருந்தோ, மற்ற வங்கிகளிருந்தோ இடமாற்றம் செய்யும் போது வாகனம் அல்லது இரயில் மூலம் செல்லும் போது அதற்கும் வழிக்காவல் செய்தனர். கைதிகளை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று சிறைகளில் ஒப்படைக்கவும் வழிக்காவல் செய்வர்.

அடுத்து காப்பு அலுவல். முக்கிய பிரமுகர்களுக்கு தங்கும் இடங்களில் காப்பு அலுவல் செய்வர். மற்றும் ‘செரிமோனியல்’ காப்பு அலுவல் செய்வர். அணைகளில் மின் உற்பத்தி செய்யும் இடங்களில் காப்பு அலுவல் செய்வர். கருவூலங்களுக்குக் காப்பு அலுவல் செய்வர். பல் வேறு விதமான நீதிமன்றங்களுக்கு மத்திய சிறைகள், கிழைச்சிறைகளிலிருக்கும் கைதிகளை வழக்குக்காக ஆஜர் படுத்த வழிக்காவல் பணி செய்கின்றனர். வழிக்காவலின் போது அதற்குத் தக்கவாறு ஆயுதங்கள், தோட்டாக்கள், கைவிலங்குகள், நீண்ட இரும்புச் சங்கலி ஆகியவை எடுத்துச் செல்வர். அடுத்து பெரும் விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிக்கு லத்தி மற்றும் துப்பாக்கியுடன் கூட்டங்களுக்குத் தக்கவாறு பாதுகாவல் அலுவலாக குழுவாக அனுப்பப்படுவர், மேலும் தபால் அலுவல்,கிடங்கு அலுவல், பிட்டிக் அலுவல் என்று காவலர்கள் அனுப்பப்படுவர். சட்ட விரோதமான கூட்டத்தைக் கலைக்க ஆயுதப்படையிலிருந்து தான் காவலர்களும் அதிகாரிகளும் அலுவலாகச்செல்வர். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆணையின் பேரில் தான் வெளியே வாகனத்துடன் அனுப்பி வைக்கப்படுவர். அப்பொழுது அதற்கென்று உள்ள உபகிரணங்களை அனைத்தும் எடுத்துச்செல்வர். மாநகரங்களில் குதிரைப் படையில் இருப்பவர்களும், மோப்பநாய் பயிற்சியில் இருப்பவர்களும் ஆயுதப்படை காவலர்கள்தான். காவல் துறைக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் ஆயுதப்படை காவலர்கள் தான் ஓட்டுனர்களாக பணியில் இருப்பர். அதிகாரிகளின் அலுவல்களிலும், வீடுகளிலும் ஆயுதப்படைக் காவலர்கள் ஆர்டர்லியாக முன்பு அனுப்ப ப்பட்டனர் ஆனால் தற்போது அவர்களுக்குப்பதிலாக ‘பேசிக்சர்வெண்ட்’ நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் அலுவலகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு உதவியாக ‘ஸ்டாப் டூட்டி’ என்றும், பிராட்மா, கம்யூட்டர், ஒயர்லஸ், வி.எச்.எப். ஆகிய பிரிவுகளுக்கும் ஆயுதப்படை காவலர்கள் அனுப்பப் பட்டனர். ஆயுதப்படையிலிருந்து ஆர்.எஸ்.ஐ., ஆர்.ஐ.,டி.எஸ்.பி. மட்டும் சில வருடங்கள் போக்குவரத்துப் பிரிவிற்கு மாறுதல் செய்யப்படுவர். கேட்டகிரி ஒன்றில் 8 மணி நேரசுழற்சிப்படி அலுவல் இருக்கும் போது ஆயுதப்படை காவலர்கள் தொடர் அலுவலால் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. ஆயுதப்படை காவலர்களுக்கு ‘ஏன்யுல் மாபிலிசேசன்’ என்ற திரட்டுக் கவாத்து வருடம் ஒரு முறை 3 வாரங்கள் கவாத்து, உடற்பயிற்சி, மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் நடைபெருகிறது. அந்த நேரத்தில் கேட்டகிரி ஒன்றிலிருந்து கவலர்கள் மற்றும் எஸ்.ஐ.கள் வந்து ஆயுதப்படை அலுவல்களைச் செய்வார்கள். உண்மையில் கவாத்துப் பயிற்சிகள் கேட்டகிரி ஒன்றுக்குத்தான் தேவை. இந்த முறையில் மாற்றம் தேவை.

ஆயுதப்படையில் ஆர்மரி என்று ஒன்று இருக்கும்.அங்குதான் ‘ஆர்டர்லி சார்ஜண்ட்’ என்பவர் ஆயுதப் படையின் காவலர் வருகை பார்த்து ஒன்றாக திரட்டி அலுவல்கள் நியமிப்பார். தற்போது அவரை ‘டூட்டி ரிசர்வ் சப் இன்ஸ்ப்பெக்டர்’ என்று அழைக்கிறார்கள். அவர் தான் அனைத்து காவலர்களுக்கும் பல்வேறு அலுவல்களை நியமித்து அனுப்பி வைப்பார். வாரம் ஒரு முறை டூட்டி ரிசர்வ் சப்இன்ஸ்பெக்டர் மாற்றப்படுவார். தற்போது சிறைக்காவலர்கள் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர் ஏன் இந்த கைதி வழிக்காவலை சிறைக் காவலர்களே செய்யக்கூடாது? இதிலும் மறுமலர்ச்சி தேவை.

இந்த கேட்டகிரி இரண்டிற்கு ஒரு டி.ஐ.ஜி யோ, ஐ.ஜியோ, டி.ஜி.பியோ கிடையாது. ஏன் இந்த அவல நிலை? ஒவ்வொரு கேட்டகிருக்கும் ஒரு டி.ஜி.பி., ஒரு ஏடி.ஜி.பி., ஒரு ஐ.ஜி., என்று மாற்றினால் இந்த மாற்றம் நன்றாகத்தானே இருக்கும். மாற்றம் தேவை.


--------------------------------(காவல் தொடரும்)

Thursday, February 12, 2009

ஆயுதப்படை காவல்-கேட்டகிரி இரண்டு

காவல் துறையில் இரண்டாவது கேட்டகிரி என்று சொல்லப்படும் ஆயுதப்படைகாவல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ‘ரிசர்வ்போலீஸ்’ என்பதாகும். ரிசர்வ்போலீஸ் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டிலில் இயங்குவது. அதற்கென்று தனி D.I.G யோ, I.G. யோ கிடையாது. அதில் மாவட்டத்திற்குத் தகுந்தவாறு பிளட்டோன் எண்ணிக்கை மாறுபடும். ஆயுதப்படை பிளட்டோன் என்பது 62 பேர்களைக் கொண்ட பிறிவு. ஒரு ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் அதாவது அந்தக்காலத்தில் சார்ஜெண்ட் என்பர். அடுத்தவர் ரிசர்வ் அசிஸ்டெண்ட் சப்இன்ஸ்பெக்டர் அதாவது ஜமேதார், பின் 4 தலமைக்காவலர், 4 நாயக், 4 லேன்ஸ் நாயக், மற்றும் 48 காவலர்கள் ஆக 62 பேர் இருப்பார்கள். ஆனால் தற்போது ரிசர்வ் அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் லேன்ஸ் நாயக் என்ற பதவிகளை எடுத்து விட்டு ரிசர்வு சப் இன்ஸ்பபக்டர் என்றும் கிரேடுஒன் நாயக் என்றும் மாற்றி விட்டனர். இது போன்ற பிளட்டோன்களுக்கு ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பொருப்பாளராக இருப்பார். அவரை அந்தக்காலத்தில் சார்ஜண்ட் மேஜர் என்று அழைப்பார்கள். ஆங்கிலேயர்கள் இருந்தபோது அவர்கள் தான் அந்தப் பதவியில் இருந்தார்கள். பின் 1950 க்குப்பின் இந்தியர்கள் பயிற்சி கொடுத்து இப்பணியில் நியமிக்கப்பட்டனர். இது இல்லாமல் ஹெட்கோட்டர் பிளட்டோன் என்ற பிறிவும் இருந்தது. அதில் காவல் துறையின் வாகனம் ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், தச்சுவேலை(கார்பெண்டர்) செய்பவர்கள், தையல் வேலை செய்பவர்கள் (டெய்லர்) மற்றும் அலுவலகங்கள், அதிகாரிகளின் வீட்டில் வேலை செய்ய ‘ஆர்டர்லி’ என்ற காவலர்களும், துப்பாக்கிகளை பழுது பார்க்க ஆர்மரர்களும் இதில் அடங்குவர். தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளும் இவர் பொருப்பில் இயங்கும். இது இல்லாமல் காவலர்கள் குடியிருப்பு, அலுவலகம் போன்றவற்றை சுத்தம் செய்ய துப்புரவுத் தொழிலாளர்களும் அமர்த்தப்படுவர். இவர்களை வேலை வாங்க லைன் ஆர்டர்லி என்பவரும் ஆயுதப்படை தலமைக் காவலர் அல்லது காவலர் நியமிக்கப்படுவார். இவையெல்லாம் சார்ஜண்ட் மேஜர் அதாவது ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பொருப்பில் இயங்குவர்க்கள். இதில் இருப்பவர்களிக்கு தனி அலவன்ஸ் கொடுக்கப்படும். கண்ணீர் புகைப் பயிற்சி கொடுப்பதும் ஹெட்கோட்டர் சார்ஜண்ட் பொருப்பாகும். ஆயுதப்படைகிடங்கில் மாவட்டத்திற்கு வேண்டிய துப்பாகி தோட்டாக்கள், டெப்பாசிட் துப்பாக்கிகள் யாவும் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பொருப்பில் இருக்கும். ஆயுதப்படையில் பேண்டு பார்ட்டி என்ற இசைக்குழுவும் உண்டு ஒவ்வொரு வெள்ளிக்கழமையிலும் சிறப்புக்கவாத்து நடைபெரும் அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிடுவார், மோட்டார் வகனங்களையும் பார்வையிடுவார். அப்போது இவர்கள் இன்னிசை வாசிப்பார்கள். இதில் குழல் ஊதுபவர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு செரிமோனியல் கார்டுகளிலும் ஊதுவார்கள். இவர்கள் அதிகாலை 4 மணிக்கு,
ரிவாலி, கோட்டர் கால், ரோல்கால், எமர்ஜென்சி கால், அலாரம் கால், ரெட்ரீட் கால், லாஸ்ட் போஸ்ட் போன்ற மாறுபட்ட இசையில் ஊதுவார்கள். ஆயுதப்படையில் வாரத்தில் நான்கு நாட்கள் கவாத்துப்பயிற்சியும், ஒருநாள் ஆயுதங்கள் சுத்தம் செய்தல், சனிக்கிழமை ரூட்மார்ச் என்னும் குறைந்தது 5 கி.மீ நடையாகச்சென்று திரும்புதல். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்தல். இது வழக்கமாக நடைபெருவது.இது இல்லாமல் எந்த நேரத்திலும் தயார் நிலையில் ஒரு பிறிவு இருப்பது.

ஆயுதப்படை காவலர்கள் சேரும்போது 10 வது படித்திருக்க வேண்டும், உயரம் 168 செ.மீ.க்கு மேல் இருக்க வேண்டும், மார்பளவு 80-86 செ.மீ. இருப்பதுடன் 5 செ.மீ. மார்பு விரிய வேண்டும். வயது 18க்கு மேல் இருக்கவேண்டும். உடல் தகுதி தேர்விலும் எழுத்துத் தேர்விலும். தேரவேண்டும். பின் மருத்துவப் பரிசோதனை முடித்து கோவை அலலது வேலூரில் காவலர் பயிற்சிப் பள்ளியில் 10 மாதம் பயிற்சி பெற்று முடித்து மாவட்டத்தில் வந்து ஆணை பெற்று ஆயுதப்படையில் அமர்த்தப்படுவார்கள். ஆயுதப்படை அலுவல் அனைத்தும் செய்யவேண்டும். பின் சீனியாரட்டிப் படி பரிசோதனை, தேர்வுகள் வைத்து பதவி உயர்வு அளிக்கப்படும். ஆனால் கேட்டகிரி ஒன்றுக்கு சீனியாரிட்டிப்படி காவலர்களாக மாற்றப்படுவார்கள். அதற்கு 5 அல்லது 10 ஆண்டுகள் கூட ஆகலாம். இவ்வாறு காவலர்கள் மட்டுமே தாலூக்கா போலீசுக்கு மாற்றப்பட்டனர் மற்ற அதிகாரிகள் மாற்றப்படவில்லை. அதனால் ஆயுதப்படையில் பணிபுறிந்த அதிகாரிகள் அங்கேயே பதவி உயர்வு பெற்று ரிசர்வ் இன்ஸ்பெக்டர், டெபுடி சூப்பிரிடெண்ட் ஆயுதப்படை மற்றும் எடி.எஸ்.பி. ஆயுதப்படை, மற்றும் மாநகரக்காவலில் மட்டும் டெப்பிடி கமிசனர் ஆயுதப்படை என பதவி உயர்வு கொடுக்கப் பட்டது அதற்கு மேல் ஆயுதப்படையில் பதவி உயர்வு கிடையாது. ஆயுதப்படைக்கென்று உயர் அதிகாரரகள் அமைக்கப்படவில்லை. அதனால் அவர்கள் நலன்கள் ஆராய்ந்து முடிவெடுக்க யாரும் இல்லை. இடைவிடாத அலுவலால் குடும்ப நலன் பார்க்க முடியாத தால் அல்லல் பட்டனர். இதனால் ஒன்று பட்டு போராடினர் குறைகளைச் சொல்ல சங்கம் கேட்டனர். அதே சமயம் கேட்டகிரி ஒன்றிலிருந்து தண்டனையக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த ஏற்ற தாழ்வுகள் ஏன்
ஒழுங்கு படுத்த கேட்டகிரிகள் அகற்றி காவல் என்பது ஒரே நிலை என மாற்றங்கள் செய்ய 3வது போலீஸ் கமிசன் குழு இவைகளை நன்கு ஆராய்ந்து செயல் பட வேண்டும். காவல் துறையில் மறுமலர்ச்சசயை ஏற்படுத்த வேண்டும்.


அடுத்து ஆயுதப்படையின் அலுவல் பற்றி தொடரும்.

Friday, January 23, 2009

மூன்றாவது கேட்டகிரி - பெட்டாலியன்.


மூன்றாவது கேட்டகிரி - பெட்டாலியன்.


இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, காவல் துறையில் காவலராகச் சேர்வதற்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தாலே போதும் என்ற ஓர் நிலை இருந்தது.

காலப்போக்கில் குறைந்த கல்வித் தகுதி 8 வது வகுப்பு வரை படித்தவர்களை காவலர்களாக தேர்வு செய்து தமிழ் நாடு சிறப்பு காவல் படையிலேயே (மலபார் ஸ்பெசல் போலீஸ்) பணிக்காலம் முழுவதும் கேட்டகிரி 3 என்ற நிலையிலேயே பணியாற்றி அதிலேயே பதவி உயர்வுகள் பெற்று கமேண்டென்ட் (தளவாய்) என்ற உயர் பதவியைஅடைந்து, பணி ஓய்வு பெற்று வந்தனர். மலபார் ஸ்பெசல் போலீசின் பணி எல்லை என்பது இந்தியாவின் எல்லையை ஒட்டிய நேபாளம் வரை நீடிக்கப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது. மலபார் ஸ்பெசல் போலீஸ் பணி என்பது அவசரப் படை என்ற நிலையில் கலவரப் பகுதிகளுக்குச் சென்று கலவரத்தை அடக்கவும் ஒடுக்கவும் என்ற வகையில் ஒரு மினி ராணுவப்படை போன்றே செயல்பட்டு வந்தது. அதற்குத் தகுந்தாற் போல் சீறுடைகள், அரைக்கால் டவுசர், சட்டை, ஙம் பூட், ஓல்ஸ் ஸ்டாப், பட்டி,இரும்புச்சட்டித்தொப்பி, கேடையம், லத்தித் தடி, கண்ணீர் புகை கிரினேடு, கண்ணீர் புகை ஙன், .303 துப்பாக்கி தோட்டாக்கள், எல்.எம்.ஜி.கன், ஸ்டென்கன், (தற்போது எ.கெ.47) ரிவால்வர், பிஸ்டல், முதலுதவி மருந்துப் பெட்டி, ஸ்டெச்சர் கை ஒலி பெருக்கி, ஆம்புலன்ஸ் வாகனம், பேருந்துகள் ஆகியவை தயார் நிலையில் இருக்கும், அதிகாரிகளும் இருப்பர்.

ஒரு பெட்டாலியன் என்பது 750 பேர் கொண்ட குழு. பெட்டாலியனுக்குப் பொருப்பாளர் கமேண்டன்ட்- தளவாய் ஆவார். டெப்டி கமேண்டன்ட், அசிடெண்ட் கமேண்டன்ட், ஆப்பீசர் கமேண்டிங், சப்இன்ஸ்பெக்டர் பின் அவில்தார், நாயக், காவலர் என இருப்பர். ஒரு கம்பனி என்பது 120 பேர் கொண்டது, அதில் மூன்று பெளட்டோன் இருக்கும்.கம்பனிக்குப் பொருப்பாளர் ஆப்பீசர் கமேண்டிங், பிளட்டோனுக்குப் பொருப்பாளர் உதவி ஆய்வாளர் (சப்இன்ஸ்பெக்டர்) ஆவார்.

பெட்டாலியன் இருக்கும் இடங்கள்-

முதல் பெட்டாலியன் திருச்சி.
இரண்டாவது பெட்டாலியன் ஆவடி.
மூன்றாவது பெட்டாலியன் வீராபுரம்.
நான்காவது பெட்டாலியன் கோவைபுதூர்.
ஐந்தாவது பெட்டாலியன் ஆவடி எஸ்.எம்.நகர்- மகிளா பெட்டாலியன்.
ஆறாவது பெட்டாலியன் மதுரை.
ஏழாவது பெட்டாலியன் போச்சம்பள்ளி.
எட்டாவது பெட்டாலியன் டெல்லி-தீகார் ஜெயில் பாது காப்பு.
ஒன்பதாவது பெட்டாலியன் மணிமுத்தாறு.
பத்தாவது பெட்டாலியன் உளுந்தூர் பேட்டை.
பதினொன்றாவது பெட்டாலியன் ராஜபாளையம்.
பன்னிரண்டாவது பெட்டாலியன் மணிமுத்தாறு- கோஸ்டல் கார்டு.
பதிநான்காவது பெட்டாலியன் பழனி-இ.பி. கார்டு.
சுந்தரம்பள்ளியில் ஒரு பட்டாலியன்
வீராபுரம்- பட்டாலியன் - ஸ்பெசல் போர்ஸ்.

ஆகிய இடங்களில் தலைமையிடமாகக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள் தேவைப்பட்டால் தமிழ் நாட்டில் எந்தப்பகுதிக்கும் உத்திரவுப்படி அவசர நிமித்தமாகச் செல்வர்.

--------------------------------------------(காவல் தோடரும்)

Wednesday, January 21, 2009

காவல் துறையின் 3 கேட்டகிரிகள்

காவல் துறையின் 3 கேட்டகிரிகள்.

தமிழ்நாடு காவல் துறை பழைய கால முறைப்படி தாலூக்கா காவல் பிரிவு கேட்டகிரி ஒன்று என்றும், (லோக்கல் போலீஸ்) இரண்டாவது கேட்டகிரி மாவட்ட ஆயுதப்படை பிரிவு என்றும்,(ரிசர்வ்போலீஸ்) மூன்றாவது கேட்டகிரி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அதாவது பெட்டாலியன் (மலபார் ஸ்பெசல் போலீஸ் என்று ஆதியில்) என்றும், நிர்வாகம் மற்றும் மாறுபட்ட அலுவல் காரணமாகவும் ஆரம்ப காலத்தில் பிரிக்கப்பட்டது.

இந்த முப்பெரும் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அலுவல்களை வகுத்தார்கள். இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளனவாகவே அமைந்தன. அவ்வாறு அலுவல்கள் செய்யும் போது தற்காலிகமாக அடுத்த கேட்டகிரி செய்யும் அலுவலை, ஆட்கள் பற்றாக்குறை காரணமாகச் செய்தார்கள்.

இந்த மூன்று கேட்டகிரிக்கும் காவல் துறை தலைவர் ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே இருந்தார். பின் காலப்போக்கில் காவல் துறைக்கு இயக்குனர்கள் பலர், துணை இயக்குனர்கள் பலர், துறைத்தலைவர்கள் பலர் என மேற்பார்வை செய்யும் அதிகாரிகள் அதிகரித்தார்களே ஒளிய கீழ் மட்டத்தில் காவலர்கள் எண்ணிக்கை தேவைக்குத் தக்கவாறு அதிகரிக்கப் படவில்லை. அந்தக் காலத்தில் ஒவ்வொரு மாதமும்
15 ந்தேதி காவல் துறைக்கு ஆழ் எடுத்துப் பத்து மாதப் பயிற்றசிக்கு காவல் பயிற்றசிப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் மாவட்ட காவல் கண்காணிபளரே காவலரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தார். அதனால் பணி நிறைவு பெரும் போது அடுத்த காவலர் வந்து கோண்டே இருப்பார் அந்த முறை தற்போது மாற்றப்பட்டது. தற்போது ஒரே நேரத்தில் தேர்வாணையம் மூலமாக ஆயிரக்கணக்கில் ஆட்கள் தேர்ந்தெடுத்து பயிற்சி காலத்தையும் (4 மாதம்) குறைத்து தேர்வு நடக்கிறது. இருந்தும் காவலர் பற்றாக்குறை இருந்து கொண்டு தான் உள்ளது. இதனால் வேலைப்பழு அதிகரித்தும், வேலை செய்யும் நேரமும் அதிகறிப்பால் படித்த காவலரிடையே மன உழச்சலால் ஒழுக்கமின்மை, கீழ்படியாமை அதிக நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வது அந்த விடுப்பு நேரத்தில் ஒழுக்கத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தமது குறைகளை எடுத்துச்சொல்ல அவர்களுக்கு என்று தனிச்சங்கம் வேண்டும் என்று கேட்டார்கள். அதுவும்
27-6-1979 ந்தேதி காவல் துறைத் தலைவர் அவர்கள் திருமிகு இ.எல்.ஸ்ட்ரேஸி,ஐ.பி., மூன்று விதமான சங்கங்களை அமைக்க அனுமதி அளித்தார்கள். காவலர், தலைமைக்காவலர்களுக்கோர் சங்கமும், உதவி ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர்க்கோர் சங்கமும், துணைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்க் கோர் சங்கமும், என மூன்று சங்கங்கள். அவை செயல்பாடு திருப்தியின்மையே.

--------------------------- (தொடரும்)

Monday, January 19, 2009

காவல் தோற்றம்

‘காவல்’ இந்த சொல்லை நோக்கும் போது யாருக்கு யார் காவல் என்ற வினா எழும். ஆதிகாலத்தில் சமூகம் உண்டான போது பலம் மிக்கவர் அந்த சமூகத்திற்குப் பாதுகாவலராகவும், தலைவனாகவும் இருந்துள்ளார்கள். பின் செல்வங்கள், உணவுப்பொருட்கள் ஒரே இடத்தில் சேரும் போது அந்த தனி நபருக்குக் காவல் தேவைப்பட்டது. இல்லாதவன் இருப்பவர்களிடம் அபகறிக்கும் செயல்களைக் கட்டுப்படுத்த காவல் தேவைப்பட்டது. அவ்வாறு தேவைப்பட்டபின் அது படையாக மாறியது. படையின் மற்றொருபகுதி காவலாக மாறி ஆங்கிலேயர் காலத்தில் காவல் துறையாக மாற்றம் அடைந்து 1861 ஆண்டிலிருந்து ஒரு காவல் ஆணைகளாக (போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் ) உருவாகினார்கள் . அன்றிலிருந்து காவல் ஆணைப்படி காவல்துறை செயல்படத்துவங்கியது. அந்த 1861ஆண்டிலிருந்து அதிக மாற்றம் இல்லாமல் காவல் துறை இன்னும் செயல்பட்டு வருகிறது.அதில் ஏகப்பட்ட குறை நிறைகள் இருப்பதால் தற்போது மூன்றாவது போலீஸ் கமிசன் குழு அமைத்து அதனை பரிந்துறைகள் தற்போதுள்ள அரசுக்கு அளிக்க உள்ளார்கள். அந்தகுழு பின்வருமாறு-

தலைவர் திருமிகு பூர்ணலிங்கம், ஐ.எ.எஸ் அவர்கள்
துணைத்தலைவர் திருமிகு வெங்கடேசன் எக்ஸ் எம்.பி. அவர்கள்.
திருமிகு இராமானுஜம் ஐ.பி.எஸ். அவர்கள்.
திருமிகு இராமச்சந்திரன் ஐ.பி.எஸ். அவர்கள்.
திருமிகு ஜோன்ஸ்ரூசோ அவர்கள் ஆகியோர் ஆவர்.

இந்த நிலையில் காவல் துறை பற்றி மக்களுக்கு ஒரு விளிப்புணர்வு ஏற்படுத்தவும் மாற்றங்கள் பற்றி ஆலோசனை ஏற்றுக்கொள்ளவும் இக்குழு நல்லவைகளை ஏற்று மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களுக்குப் பரிந்துறை செய்ய வேண்டி இந்த வலைப்பதிவை அளிக்கவுள்ளேன் குறையிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். நான் க.பொ.குப்புசாமி காவல் துணைக்கண்காணிப்பாளர் (D.S.P. Category ii ) 34 வருடங்கள் பணியாற்றி பணிநிறைவு பெற்றுள்ளேன். இருப்பிடம் கோவை-641 037.

எனது முந்தைய வலைப்பதிவுகள்:-

1. மூலிகை வளம். http://mooligaivazam-kuppusamy.blogspot.com/
2. ஜாதகம் இல்லா ஜோதிடம். http://www.kuppusamy-prasna.blogspot.com/
3. தா(வரங்கள்). http://crop-kuppu.blogspot.com/


(அடுத்து காவல் துறையின் முப்பிறிவுகள்- தொடரும்.)