Sunday, June 7, 2009

“எக்ஸ்ட்ரா டிரில்?’



“எக்ஸ்ட்ரா டிரில்’ என்றால் கேட்டகிரி இரண்டாம் காவல் பிறிவில் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை சிறு தண்டனைக்காக ஆயுதப்படை ஆய்வாளரால் அளிக்கப்படும் ஒரு தண்டனை, கூடுதல் கவாத்து என்று பெயர். இதற்கென்று ‘Minor Puhishments Register’ என்ற சிறுதண்டனைப் பதிவேடு - ஓராண்டிற்கானது - ஒவ்வொரு பிறிவிலும் இருக்கும். இது காவலர்கள் ஒரு குறிப்பிட்ட அலுவலுக்கு, அல்லது அலாரம் காலுக்கு காலதாமதமாக வருதல் போன்ற சிறு தவறுகள் செய்பவர்களை ஆய்வாளர் நேர் முக அறையில் உதவி ஆய்வவளர் ஆஜர்படுத்துவார். ஆய்வாளர் அதை நேரில் விசாரித்து உண்மையான காரணம் அறிந்து அதற்குத் தக்கவாறு சிறு தண்டனைகள் அளித்து அந்தப் பதிவேட்டில் பதிவு செய்வார். சில சமயம் அந்த நேர்முக அறையில் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் அதில் அவரை மன்னித்தும் பதிவு செய்வார். இதில் வழங்கப்படும் தண்டனைகள் மணிக்கணக்கில் வழங்கப்படும். அதை உதவி ஆய்வாளர் ‘ஆர்டர்லி சார்ஜண்டிடம்’ அனுப்பி வைப்பார். அவர் அந்த தண்டனையை ஒரு என்.சி.ஓ. மூலம் காலை 11 மணி முதல் 12 மணிவரை டம்மி துப்பாக்கியுடன் நிறுத்தாமல் மைதானத்தில் எடுக்கப்படுவார். அதை பொது நாட்க்குறிப்பில் பதிவு செய்யப்படும். இது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே கூடுதல் கவாத்து எடுக்கப்பட வேண்டும். 3 மணி நேரம் என்றால் 3 நாட்கள் எடுக்கப்படவேண்டும். இது பி.எஸ்.ஓ வில் உள்ளது.

கடந்த 03-06-2009தேதி தின மலரில் தர்மபுரி ஆயுதப்படைக்காவலர் ஒருவர் கவாத்து துப்பாக்கியுடன் செய்வது போன்ற போட்டோ போட்டு அவர் அனுமதியின்றி இரவில் பயிற்சிக்காவலரை அரசு மோட்டர் சைக்கிளில் ஏற்றி வந்ததை எஸ்.பி. பார்த்து 3 மணி நேர கூடுதல் கவாத்து அளித்து அதை ஒரே நேரத்தில் செய்ய ஆணையிட்டதால் செய்கிறார் என்று போட்டிருந்தது. இது தான் கேட்டகிரி இரண்டிற்கு எஸ்.பி. செய்யும் காவல் மறுமலர்ச்சியா? நடக்கக் கூடாது ஒரு பேச்சுக்காக. அந்தக் காவலரை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதை அவர் எண்ணி வருத்தப்பட்டு உயிர் போக்கிக் கொண்டாலோ, மயங்கி விழுந்து உயிர் பிறிந்தாலோ யார் பொறுப்பாவார்? தண்டனை அளிப்பவர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

(நன்றி தினமலருக்கு)

--------------------------------------(காவல் தொடரும்)

Monday, June 1, 2009

சிறைத்துறையில் மறுமலர்ச்சியா?


இன்று (1-6-2009) மாலை 4-30 மணிக்கு கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் ( பி.ஆர்.எஸ்) சிறைத்துறையில் பணியாற்றத் தொடங்கவுள்ள ‘வார்டன்’ களுக்கு பயிற்சி நிறைவு நாள் விழா தமிழ் நாட்டில் முதல் முறையாக இங்கு நடைபெற்றது. இதில் மொத்தம் 265 பேர்களுக்கு காவல் துறையினரால் ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் சிறைத்துறை ஒழுங்கு முறைச் சட்டங்கள் மற்றும் காவலர்களுக்கு அளிக்கும் பயிற்சி போன்றே சிறப்பாக அளிக்கப்பட்டது. இந்த மறுமலர்ச்சிப் பயிற்சியை ஏற்படுத்தியவர் திரு.ஆர். நடராஜ், ஐ.பி.எஸ் சிறைத்துறை இயக்குனர் (டி.ஜி.பி.) சென்னை அவர்கள் ஆவார். இவர் காவல் துறையில் கேட்டகிரி ஒன்றில் பணியாற்றியவர். இவர் சிறைத்துறையில் இயக்குனர் ஆன பின்புதான் பல மாற்றங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திக் காட்டியவர். அந்த மாற்றங்களில் மறு மலர்ச்சியாக வார்டன்களுக்கு காவல் துறையினரால் பயிற்சி அளிக்க ஏற்பாடுசெய்தது. எண்ணற்ற மாற்றங்களைச் செய்து கொண்டுள்ளார். சிறையில் உள்ள கைதிகளை கைதி என்று அழைக்காமல் இல்லவாசிகள் என்று அழைக்கப்படுகின்றனர், ஞாயிறு நாட்களில் சிறையில் உள்ளவர்களைப் பார்க்க அனுமதித்தது. படிக்க ஏற்பாடு செய்தது, உள்ளிருப்பவர்களின் குடும்ப நலன் பேணுவது போன்ற பல மாற்றங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்தியா முழுவதும் 114 மத்திய சிறைகள், 27 திறந்த வெளிச் சிறைகள் உள்ளன. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் 3 திறந்த வெளிச்சிறைள், மொத்தம் 134 சிறைகள் உள்ளன.

இந்த கோவை காவலர் பயிற்சிப்பள்ளியின் முதல்வர் கீழே உள்ள படத்தில் இருக்கும் திரு.சிங்காரம் (எடி.எஸ்.பி.) அவர்கள். அவர் கேட்டகிரி இரண்டைச்சேர்ந்தவர். அவர் தான் இந்த புதிய பயிற்சியின் ஊன்றுகோல் போன்று சிறம்பட செயல் பட்டு பயிற்சி நிறைவடையச் செய்தவர். சிறைத்துறை இயக்குனர் பேசும் போது ஒரு வார்த்தை கூட அவரைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் சென்னையில் உள்ள பி.டி.சி. முதல்வரைப் பற்றித்தான் பேசினார். அவர் திரு. சண்முகராஜேஸ்வரன், ஐ.பி.எஸ்., கேட்டகிரி ஒன்றைச் சேர்ந்தவர். அவருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த பாராபச்சம் ஏன்? உழைப்பவனை விட்டு உட்கார்ந்திருப்பவனைப் புகழ்வது போல் இச்செயல் உள்ளது. கனம் சிறைத்துறை இயக்குனர் அவர்கள் இச்செயலை சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன். நானும் அந்த நிறைவு விழாவுக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். மறு மலர்ச்சிகள் மேலும் மாற வேண்டும்.

--------------------------------------(காவல் தொடரும்)


Thursday, May 7, 2009

‘மாப் ஆப்பரேசன்’

இந்த ‘மாப் ஆப்பரேசன்’ என்பது காவல்துறையில் கேட்டகிரி இரண்டிலும், மூன்றிலும் உள்ள ஒரு பணி தான். மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் உத்திரவுப்படி தயார் நிலையில் உள்ள காவலர்களும் அதிகாரிகளும் உடனே சட்ட விரோதமான கூட்டம் கூடியுள்ள இடத்திற்கு காவல் வாகனத்தில் செல்வார்கள். அந்த நிகழ்வுக்கென தனி உடைகளும் உபகிரணங்களும் இருக்கும். தலைக்கவசம், கேடையம், லத்தி தடி, கண்ணீர்புகை கிரின்னேடுகள், கேஸ் ஙன்கள், செல்கள், முதலுதவிப்பெட்டி, ஸ்டெரச்சர், மெக்காபோன், எச்சரிக்கை எழுத்துள்ள துணிக் கொடி, பியூகில் மற்றும் .303 துப்பாக்கி தோட்டாக்கள் சகிதம் செல்வார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் சட்ட விரோதமான கூட்டம் கூடக்கூடாது என ஆணை பிரகடனப் படுத்தியிருந்தும் அதை சட்டை செய்யாமல் மீறி கூட்டம் கூடி பொது சொத்துக்கு பங்கம் விழைவித்தும், காவல் துறையையும், அல்லது நிர்வாகத்தினறையும் தரக்குறைவான வார்த்தைகளைல் கோசம் எழுப்பிக் கொண்டு ஆயுதம், ராடு, தடிகளுடன் மூன்னேறி வரும் கும்பலுக்கு முன்னால் சுமார் 100 கஜம் தூரத்தில் இந்த மாப் ஆப்பரேசன் பார்ட்டி முறைப்படி அணிவகுத்து நிற்கும். அங்கு காவல் முக்கிய அதிகாரியும், வருவாய்த் துறை அதிகாரியும், அணிநடத்தும் அதிகாரியும் இருப்பார்கள்.

இந்த அணியில் முன்னால் நிற்பது கண்ணீர்புகை உபயோகிக்கும் அணி, அடுத்து மூன்று வரிசை லத்தி அணிகள் இறுதியில் சிறு குழுவான துப்பாக்கி அணியும் முதலுதவிக் குழுக்கழும் இருப்பார்கள். குழு நடத்தும் ஆயுதப்படை அதிகாரி உயர் அதிகாரியிடம் உத்திரவு பெற்று ஒரு பியூகில் ஊதுபவரை நீண்ட ஒலி எழுப்பச்சொல்லி கூட்டத்தின் கவனத்தைத் திருப்பி ‘நீங்கள் கூடியருப்பது சட்டவிரோதமான கூட்டம் உடனே கலைந்து போங்கள் இல்லாவிட்டால் கண்ணீர் புகை உபயோகித்துக் கலைக்க நேரிடும் ஓடிப்போங்கள் ! ஓடிப்போங்கள் !! ஓடிப்போங்கள்!!!’ என்று மெக்கா போன் மூலம் எச்சரிப்பார். பின்னால் இருவர் எச்சரிக்கைக் கொடியை உயர்த்திப் பிடிப்பார்கள். அவர்கள் கலைந்து போகாவிட்டால் கண்ணீர் புகை கிருனேடுகளை வீசுவார்கள், பின் கேஸ்ஙன் மூலம் செல்களை 45 டிகிரி கோணத்தில் வைத்துச் சுடுவார்கள். அது கூட்டத்திற்குள் விழுந்து புகை மண்டலம் உண்டாக்கிக் கண்எறிச்சலை உண்டாக்கும். அதற்கும் கூட்டம் கலையாவிட்டால் பியூகில் மூலம் நெடும் ஒலி எழுப்பி ஒரு காவலர் சிறிது முன்நேறி ‘‘நீங்கள் கூடியருப்பது சட்டவிரோதமான கூட்டம் உடனே கலைந்து போங்கள் இல்லாவிட்டால் லத்தியால் அடித்துக் கலைக்க நேரிடும் ஓடிப்போங்கள்! ஓடிப்போங்கள்!! ஓடிப்போங்கள்!!!’ என்று எச்சறித்து விட்டு அதிகாரியின் உத்திரவுப்படி மூன்று வரிசை பிரிவுகளும் கூட்டத்தை நோக்கிச் சென்று அடிப்பார்கள். அடித்துக் கொண்டு அலைபோல் வந்து கொண்டிருப் பார்கள். அதற்க்கும் கூட்டம் கலையவில்லை யென்றால் நடத்தும் அதிகாரி ஆணைப்படி பியூகில் ஊதுபவர் டட் டட் டட் டட்டா. .... .. . .. என பலமுறை தொடர்ந்து ஒலிக்கும் பொழுது அடித்துக் கொண்டிருந்தவர்கள் திரும்பி வந்து துப்பாக்கிக் குழுவுக்கு இடது, வலது, பின்பக்கமென அணியாக நின்று வெளிப்பக்கம் பார்த்து அவர்களுக்குக் காவலாக நிற்பர்.

துப்பாக்கிக் குழு இரு வரிசையாக சிறிது முன்னே சென்று அதன் அதிகாரி ஆணைக்கேற்ப முன் வருசைக்குப் பின்னால் இரண்டாவது அணிமுன் இருவருக்கிடையே பைனட் பொருத்தி நின்று துப்பாக்கியில் தோட்டா லோடு செய்வார்கள். அதிகாரி வலது பக்கம் உள்ள காவலரை கூட்டத்தை எச்சரிக்கும் படி சொல்வார். அவர் 5 அடி முன்னால் சென்று மெக்கா போன் மூலம் ‘‘நீங்கள் கூடியிருப்பது சட்ட விரோதமான கூட்டம் உடனே கலைந்து போங்கள் இல்லாவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக் கலைக்க நேரிடும் ஓடிப்போங்கள்! ஓடிப்போங்கள்!! ஓடிப்போங்கள்!!!’ பின் உத்திரவு பெற்று குழுவிற்குப் பின்னால் நின்று கூட்டத்தில் முக்கிய ஆளை சுடும்படி ஒரு காவலரைத் தொட்டு உத்திரவு கொடுப்பார். அந்தக் காவலர் குறிதவராமல் சுடுவார். அந்தக் குறிப்பிட்டவர் குண்டடி பட்டு கீழே விழுந்தவுடன் கூட்டம் கலைந்து ஓடுவார்கள். உடனே முதலுதவி பார்ட்டி முன்னோக்கிச் சென்று அடிபட்டவருக்கு முதலுதவி செய்வார்கள். அப்பொழுது இரு துப்பாக்கி வீரர்கள் உடன் இருப்பர், ஸ்டெச்சரில் எடுத்து வந்து மருத்துவ மனைக்கு உடனே அனுப்பி வைப்பர்
பின் நிறைவு செய்து ஆயுதப்படை அதிகாரி ஒரு மினிட் அரிக்கையை அங்குள்ள உயர் அதிகாரிக்குக் கொடுப்பார். அதில் மாப்ஆப்பரேசன் பற்றிய முழு விபரம் இருக்கும்.

ஆனால் தற்போது கூட்டத்தைக் கலைக்க தண்ணீர் பீச்சியும், ரப்பர் தோட்டாக்கள் பயன் படுத்தியும் கலைக்கிறார்கள். மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

--------------------------------------(காவல் தொடரும்)

Friday, April 24, 2009

மனித நேயம்


தினமலர்-கோவை தேதி 23-4-2009 ல் காவல் துறை உயரதிகாரி திரு சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். சொன்னது.

இரவு 10 மணிக்கு, முகப் பேரிலிருக்கும் என் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். மதுரவாயல் அருகே வந்துகொண்டிருக்கும் போது, சாலையோரம் ஒரு கூட்டம். என்ன வென்று காரை நிறுத்திப்பார்த்தால், ஒரு மனிதர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அப்போதுதான் அந்த விபத்து நடந்திருக்கிறது.

டிரெய்லர் லாரி அடித்து, இழுத்துக் கொண்டு போனதில் அவருக்கு பலத்த காயங்கள். கால் துண்டாகி தொங்கிக்கொண்டிருந்தது. சுற்றியிருப்பவர்கள் யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. நான் உடனே ஆம்புலன்சுக்குப்போன் செய்தேன். அடிபட்டவர், தான் ஒரு வக்கீல் என்று மெல்ல சொன்னார். நிமிடங்கள் ஓடின. ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆட்டடவை நிறுத்தி, அடிபட்ட வக்கீலைத் தூக்கிப் போட்டு, உடன் என் கான்ஸ்டபிளையும் ஏற்றினேன். நான் காரில் முன்னே பைலட் போல செல்ல, ஆட்டோ பின்னால் வேகமாக வந்தது. அதற்குள் மருத்துவ மனைக்கு தகவலைச் சொல்லி விட்டேன்.

அங்கே போய்வக்கீலை ஐ.சி.யு. வில் சேர்த்தோம். அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. இன்னொரு பெரிய மருத்துவமனையில் அந்த அரியவகை ரத்தம் இருப்பதை அறிந்து, அந்த மருத்துவ மனைக்கு விரைந்தோம். அங்கே சென்ற போது இரவு இரண்டு மணி. இதற்கு இடையே அந்த வக்கீல் வீடிற்குத் தொடர்பு கொண்டுதகவல் கொடுத்தோம்.

மொத்தம் எட்டு ஆப்பரேசன் செய்தால் தான் காலைக் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை. நிறைய ரத்தம் வேண்டி இருந்தது. சில பேருக்கு மட்டுமே இருக்கும் அந்த அரிதான,’ஏ’ நெகடிவ் வகை குரூப் கொண்ட விஜயகுமார் என்ற காவலர் சத்தியமங்கலத்தில் இருப்பது எனக்குத் தெரியவந்தது.

உடனே அவரை சென்னைக்கு வரச்சொன்னேன்.அதே போல், இங்கே சிட்டிபாபு என்ற காவலரையும் வரச்சொன்னேன். அவர்களும் காலையிலேயே வந்து விட்டனர். பிறகு, ஆப்பரேஷன் செய்து அவரது உயிரையும், காலையும் காப்பாற்றினோம். மனிதனுக்கு மனிதன் உதவி வாழ்வதுதான் வாழ்க்கை.

--------------------------------------(காவல் தொடரும்)
---------------------------------------------------------------------------

Saturday, April 11, 2009

சென்னை கலவரம்-வக்கீல் சஸ்பெண்டா?


6. சென்னைக் கலவரம் பற்றி முன்னாள் காவல் அதிகாரிகள் சங்கம், கோவை 21-3-2009 அன்று தினத் தந்தியில் அளித்த அறிக்கையின் நகல்.

சென்னையில் கலவரத்தில் ஈடுபட்ட
வக்கீல்களின் தொழில் உரிமத்தை
‘சஸ்பெண்டு’ செய்ய வேண்டும்

முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறித்தல்

கோவை, மார்ச்.21- சென்னையில் கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களின் தொழில் உரிமத்தை ‘சஸ்பெண்டு’ செய்ய வேண்டும் என்று, முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக கோயமுத்தூர் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்க செயலாளர் என்.கே.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

போலீஸ் நிலையம் தீக்கிரையான சம்பவம்

கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் நடந்த கலவரம் சம்பந்தமாக ஏற்கனவே இடம் மாற்றி பணியமர்த்தப்பட்டு இருந்த 2 போலீஸ் அதிகாரிகளை சம்பவத்தின் போது சரிவர பணி புரியவில்லை என்ற காரணத்திற்காக தற்காலிக நீக்கம் (சஸ்பெண்டு) செய்யவும், ஏனைய வரம்பு மீறிய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்திரவிட்டுஉள்ளது. அதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறெந்த மார்க்கமும் அந்த அலுவலர்களுக்கு இல்லை. அவர்கள் அந்த தண்டனைக்குறிய குற்றங்களைச் செய்துள்ளனர் என்று ஐகோர்ட் கருதினால் அதை அவர்கள் அனுபவிக்கட்டும்.
ஆனால் அதே பிப்ரவரி மாதம் 19- ந்தேதி வன்முறையில் இறங்கிய வக்கீல்கள் குழு ஒன்று ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொழுத்தியது. காவல் நிலையம் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ்காரர்களுக்கு சொந்த மான வாகனங்களை தீக்கிரையாக்கியது. போலீஸ் துறையினரையும், தீயணைப்பு படையினறையும் தாக்கியது. மேலும் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தியது. இவை அனைத்தும் ஊர் அறிந்த நிகழ்வுகள்.

முன்னாள் மந்திரி மீது
முட்டை வீச்சு

அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஒருவர் , கோர்ட்டு ஹாலுக்குள் 2 நீதிபதிகள் முன் ஆஜராக இருந்தபோது வக்கீல்களில் ஒருசிலர் அவரை ஆபாசமாகத்திட்டி அழுகிய முட்டையால் அடித்து ஆர்ப்பாட்டம் செய்து அசிங்கப்படுத்தினார்கள். அதை தடுக்க குறுக்கிட்ட போலீஸ் துறையினரையும் தாக்கினார்கள். அதற்கு முன்பாக ஒரு போலீஸ் அதிகாரியைப்பிடித்து சீறுடையை களையச் செய்து அவமானப் படுத்தினார்கள். அரசுத் தரப்பு வக்கீல் அலுவகத்தில் பணி நிமித்தமாக வருகை தந்த போலீஸ் அதிகாரி ஒருவரை காரணமின்றி தாக்கி காயப்படுத்தினார்கள். கடந்த சில காலமாக ஐகோர்ட்டு வளாகத்திற்குள் ஊர்வலங்கள், கொடும்பாவி எரிப்பு, ஆர்பாட்டங்கள், ஆக்ரோஷ கோஷங்கள், ஆபாச சொற்பொழிவுகள், பலவந்தங்கள், பயமுறுத்தல்கள், சண்டைகள், சவால்கள், மறியல், புறக்கணிப்பு, உண்ணாவிருதம், பணிசெய்யும் வக்கீல்களை பலவந்தப்படுத்தி வெளியேற்றுதல் போன்ற பல வகையான விதிமுறை மீறிய செயல்களை செய்து நீதிமன்ற அலுவல்களை காலவறையின்றி முடக்கி வைத்தனர். இந்த ஆண்டு மட்டும் 77 நாட்களில் 66 நாட்கள் ஐகோர்ட்டு பணிகள் முடக்கப்பட்டன. பிப்ரவரி 19 கலவரம் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்குழு அறிக்கையை பகிரங்கமாக தீவைத்துக் கொழுத்தி சுப்ரீம் கோர்ட்டையே வக்கீல்கள் குழு ஒன்று அவமதித்து, சுப்ரீம் கோர்ட்டு, ஐக்கோர்ட்டு, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் சேவை அமைப்பினர் விடுத்த உருக்கமான வேண்டு கோள்களை உதாசீனப்படுத்தி, கோர்ட்டு அலுவல்களை மாதக்கணக்ககல் நடைபெறாமல் முடக்கி வைத்து நீதித்துறைக்கும், அரசுக்கும் அபரிமிதமான கால நஷ்டத்தையும் பொருள் நஷ்டத்தையும் கவுரவ நஷ்டத்தையும், ஏற்படுத்தினார்கள்.

உரிமத்தை சஸ்பெண்டு
செய்ய வேண்டும்.

அனைத்து குடிமக்களின் வரிப்பணத்தில் அவர்களது சேவைக்காக இயங்குவது நீதித்துறை. அதை நடக்க விடாமல் முடக்கிவைப்பது மக்களுக்கு எதிரான சட்ட விரோத, சமூக விரோத, தொழில் தர்மத்திற்கு எதிரான தார்மீகமற்ற செயல். மக்களால் மன்னிக்க முடியாத இத்தனை குற்றங்களையும் செய்தவர்கள் யார்-யார்? என்பது தெள்ளத்தெளிவாக எல்லா ஊடகங்களிலும், போட்டோக்களிலும், வீடியோக்களிலும் பதிவாகி சாட்சிகளாக உள்ளன. அவர்கள் யார்-யார்? என்பதை கண்டறிவதில் எந்த சிரம்மும் இல்லை.

அவர்கள் யார்-யார்? என்பதை கண்டறிந்து போலீஸ் அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்த்து போல், சம்பந்தப்பட்ட வக்கீல்களின் தொழில் உரிமத்தை உடனடியாக தற்காலிக நீக்கம் செய்து சகல சட்டப் படியான நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் செய்த அத்தனை குற்றங்களையும் உரிய தண்டனைக்கு உள்ளாக்க ஐகோர்ட்டு தன்னிச்சையாக உத்திரவிட்டு நீதியின் முன் எல்லோரும் சமம், என்கின்ற சத்தியத்தின் கட்டளையை நிலை நிறுத்த வேண்டும் என்ற இந்த மாநிலத்தின் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

--------------------------------------(காவல் தொடரும்)

Saturday, March 14, 2009

ஆயுதப்படை அலுவல்.

ஆயுதப்படை என்ற கேட்டகிரி 2 ன் காவல் பிரிவு ஒரு அடிமைப் பட்டாளம் போல் உள்ளது. அதை கவனிக்க மேல் அதிகாரிகளே கிடையாது. மாற்றாந்தாயின் குழந்தையைப் போல அவர்களின் குடும்ப நலன் பேண யாரும் அதிக அக்கரை கொள்வதில்லை. ஆயுதப்படை அதிகாரிகள், காவலர்கள் ஒரே மாதிரியான பணிகளைச் செய்து அலுத்து விட்டார்கள். அது அவர்களுக்கு மன உழச்சலைக் கொடுக்கிறது.

அந்தக்காலத்தில் கோவை, மதுரை, மங்களூர் ஆகிய இடங்களிலிருந்து கைதிகளை வேறுபட்ட வழக்குகளுக்காக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டி வழிக்காவல் அலுவல் செய்தனர். பின் பல்வேறு வழிக்காவலுக்காக அதிகாரிகளும் காவலர்களும் பயன்படுத்தப் பட்டனர். பின் காலப்போக்கில் அமைச்சர்கள் வெளியில் செல்லும் போது வழிக்காவல் செய்தனர். அடுத்து பெரும் தொகையான பணம் ‘ரிசர்வ் வங்கி’ யிலிருந்தோ, மற்ற வங்கிகளிருந்தோ இடமாற்றம் செய்யும் போது வாகனம் அல்லது இரயில் மூலம் செல்லும் போது அதற்கும் வழிக்காவல் செய்தனர். கைதிகளை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று சிறைகளில் ஒப்படைக்கவும் வழிக்காவல் செய்வர்.

அடுத்து காப்பு அலுவல். முக்கிய பிரமுகர்களுக்கு தங்கும் இடங்களில் காப்பு அலுவல் செய்வர். மற்றும் ‘செரிமோனியல்’ காப்பு அலுவல் செய்வர். அணைகளில் மின் உற்பத்தி செய்யும் இடங்களில் காப்பு அலுவல் செய்வர். கருவூலங்களுக்குக் காப்பு அலுவல் செய்வர். பல் வேறு விதமான நீதிமன்றங்களுக்கு மத்திய சிறைகள், கிழைச்சிறைகளிலிருக்கும் கைதிகளை வழக்குக்காக ஆஜர் படுத்த வழிக்காவல் பணி செய்கின்றனர். வழிக்காவலின் போது அதற்குத் தக்கவாறு ஆயுதங்கள், தோட்டாக்கள், கைவிலங்குகள், நீண்ட இரும்புச் சங்கலி ஆகியவை எடுத்துச் செல்வர். அடுத்து பெரும் விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிக்கு லத்தி மற்றும் துப்பாக்கியுடன் கூட்டங்களுக்குத் தக்கவாறு பாதுகாவல் அலுவலாக குழுவாக அனுப்பப்படுவர், மேலும் தபால் அலுவல்,கிடங்கு அலுவல், பிட்டிக் அலுவல் என்று காவலர்கள் அனுப்பப்படுவர். சட்ட விரோதமான கூட்டத்தைக் கலைக்க ஆயுதப்படையிலிருந்து தான் காவலர்களும் அதிகாரிகளும் அலுவலாகச்செல்வர். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆணையின் பேரில் தான் வெளியே வாகனத்துடன் அனுப்பி வைக்கப்படுவர். அப்பொழுது அதற்கென்று உள்ள உபகிரணங்களை அனைத்தும் எடுத்துச்செல்வர். மாநகரங்களில் குதிரைப் படையில் இருப்பவர்களும், மோப்பநாய் பயிற்சியில் இருப்பவர்களும் ஆயுதப்படை காவலர்கள்தான். காவல் துறைக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் ஆயுதப்படை காவலர்கள் தான் ஓட்டுனர்களாக பணியில் இருப்பர். அதிகாரிகளின் அலுவல்களிலும், வீடுகளிலும் ஆயுதப்படைக் காவலர்கள் ஆர்டர்லியாக முன்பு அனுப்ப ப்பட்டனர் ஆனால் தற்போது அவர்களுக்குப்பதிலாக ‘பேசிக்சர்வெண்ட்’ நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் அலுவலகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு உதவியாக ‘ஸ்டாப் டூட்டி’ என்றும், பிராட்மா, கம்யூட்டர், ஒயர்லஸ், வி.எச்.எப். ஆகிய பிரிவுகளுக்கும் ஆயுதப்படை காவலர்கள் அனுப்பப் பட்டனர். ஆயுதப்படையிலிருந்து ஆர்.எஸ்.ஐ., ஆர்.ஐ.,டி.எஸ்.பி. மட்டும் சில வருடங்கள் போக்குவரத்துப் பிரிவிற்கு மாறுதல் செய்யப்படுவர். கேட்டகிரி ஒன்றில் 8 மணி நேரசுழற்சிப்படி அலுவல் இருக்கும் போது ஆயுதப்படை காவலர்கள் தொடர் அலுவலால் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. ஆயுதப்படை காவலர்களுக்கு ‘ஏன்யுல் மாபிலிசேசன்’ என்ற திரட்டுக் கவாத்து வருடம் ஒரு முறை 3 வாரங்கள் கவாத்து, உடற்பயிற்சி, மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் நடைபெருகிறது. அந்த நேரத்தில் கேட்டகிரி ஒன்றிலிருந்து கவலர்கள் மற்றும் எஸ்.ஐ.கள் வந்து ஆயுதப்படை அலுவல்களைச் செய்வார்கள். உண்மையில் கவாத்துப் பயிற்சிகள் கேட்டகிரி ஒன்றுக்குத்தான் தேவை. இந்த முறையில் மாற்றம் தேவை.

ஆயுதப்படையில் ஆர்மரி என்று ஒன்று இருக்கும்.அங்குதான் ‘ஆர்டர்லி சார்ஜண்ட்’ என்பவர் ஆயுதப் படையின் காவலர் வருகை பார்த்து ஒன்றாக திரட்டி அலுவல்கள் நியமிப்பார். தற்போது அவரை ‘டூட்டி ரிசர்வ் சப் இன்ஸ்ப்பெக்டர்’ என்று அழைக்கிறார்கள். அவர் தான் அனைத்து காவலர்களுக்கும் பல்வேறு அலுவல்களை நியமித்து அனுப்பி வைப்பார். வாரம் ஒரு முறை டூட்டி ரிசர்வ் சப்இன்ஸ்பெக்டர் மாற்றப்படுவார். தற்போது சிறைக்காவலர்கள் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர் ஏன் இந்த கைதி வழிக்காவலை சிறைக் காவலர்களே செய்யக்கூடாது? இதிலும் மறுமலர்ச்சி தேவை.

இந்த கேட்டகிரி இரண்டிற்கு ஒரு டி.ஐ.ஜி யோ, ஐ.ஜியோ, டி.ஜி.பியோ கிடையாது. ஏன் இந்த அவல நிலை? ஒவ்வொரு கேட்டகிருக்கும் ஒரு டி.ஜி.பி., ஒரு ஏடி.ஜி.பி., ஒரு ஐ.ஜி., என்று மாற்றினால் இந்த மாற்றம் நன்றாகத்தானே இருக்கும். மாற்றம் தேவை.


--------------------------------(காவல் தொடரும்)

Thursday, February 12, 2009

ஆயுதப்படை காவல்-கேட்டகிரி இரண்டு

காவல் துறையில் இரண்டாவது கேட்டகிரி என்று சொல்லப்படும் ஆயுதப்படைகாவல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ‘ரிசர்வ்போலீஸ்’ என்பதாகும். ரிசர்வ்போலீஸ் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டிலில் இயங்குவது. அதற்கென்று தனி D.I.G யோ, I.G. யோ கிடையாது. அதில் மாவட்டத்திற்குத் தகுந்தவாறு பிளட்டோன் எண்ணிக்கை மாறுபடும். ஆயுதப்படை பிளட்டோன் என்பது 62 பேர்களைக் கொண்ட பிறிவு. ஒரு ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் அதாவது அந்தக்காலத்தில் சார்ஜெண்ட் என்பர். அடுத்தவர் ரிசர்வ் அசிஸ்டெண்ட் சப்இன்ஸ்பெக்டர் அதாவது ஜமேதார், பின் 4 தலமைக்காவலர், 4 நாயக், 4 லேன்ஸ் நாயக், மற்றும் 48 காவலர்கள் ஆக 62 பேர் இருப்பார்கள். ஆனால் தற்போது ரிசர்வ் அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் லேன்ஸ் நாயக் என்ற பதவிகளை எடுத்து விட்டு ரிசர்வு சப் இன்ஸ்பபக்டர் என்றும் கிரேடுஒன் நாயக் என்றும் மாற்றி விட்டனர். இது போன்ற பிளட்டோன்களுக்கு ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பொருப்பாளராக இருப்பார். அவரை அந்தக்காலத்தில் சார்ஜண்ட் மேஜர் என்று அழைப்பார்கள். ஆங்கிலேயர்கள் இருந்தபோது அவர்கள் தான் அந்தப் பதவியில் இருந்தார்கள். பின் 1950 க்குப்பின் இந்தியர்கள் பயிற்சி கொடுத்து இப்பணியில் நியமிக்கப்பட்டனர். இது இல்லாமல் ஹெட்கோட்டர் பிளட்டோன் என்ற பிறிவும் இருந்தது. அதில் காவல் துறையின் வாகனம் ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், தச்சுவேலை(கார்பெண்டர்) செய்பவர்கள், தையல் வேலை செய்பவர்கள் (டெய்லர்) மற்றும் அலுவலகங்கள், அதிகாரிகளின் வீட்டில் வேலை செய்ய ‘ஆர்டர்லி’ என்ற காவலர்களும், துப்பாக்கிகளை பழுது பார்க்க ஆர்மரர்களும் இதில் அடங்குவர். தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளும் இவர் பொருப்பில் இயங்கும். இது இல்லாமல் காவலர்கள் குடியிருப்பு, அலுவலகம் போன்றவற்றை சுத்தம் செய்ய துப்புரவுத் தொழிலாளர்களும் அமர்த்தப்படுவர். இவர்களை வேலை வாங்க லைன் ஆர்டர்லி என்பவரும் ஆயுதப்படை தலமைக் காவலர் அல்லது காவலர் நியமிக்கப்படுவார். இவையெல்லாம் சார்ஜண்ட் மேஜர் அதாவது ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பொருப்பில் இயங்குவர்க்கள். இதில் இருப்பவர்களிக்கு தனி அலவன்ஸ் கொடுக்கப்படும். கண்ணீர் புகைப் பயிற்சி கொடுப்பதும் ஹெட்கோட்டர் சார்ஜண்ட் பொருப்பாகும். ஆயுதப்படைகிடங்கில் மாவட்டத்திற்கு வேண்டிய துப்பாகி தோட்டாக்கள், டெப்பாசிட் துப்பாக்கிகள் யாவும் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பொருப்பில் இருக்கும். ஆயுதப்படையில் பேண்டு பார்ட்டி என்ற இசைக்குழுவும் உண்டு ஒவ்வொரு வெள்ளிக்கழமையிலும் சிறப்புக்கவாத்து நடைபெரும் அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிடுவார், மோட்டார் வகனங்களையும் பார்வையிடுவார். அப்போது இவர்கள் இன்னிசை வாசிப்பார்கள். இதில் குழல் ஊதுபவர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு செரிமோனியல் கார்டுகளிலும் ஊதுவார்கள். இவர்கள் அதிகாலை 4 மணிக்கு,
ரிவாலி, கோட்டர் கால், ரோல்கால், எமர்ஜென்சி கால், அலாரம் கால், ரெட்ரீட் கால், லாஸ்ட் போஸ்ட் போன்ற மாறுபட்ட இசையில் ஊதுவார்கள். ஆயுதப்படையில் வாரத்தில் நான்கு நாட்கள் கவாத்துப்பயிற்சியும், ஒருநாள் ஆயுதங்கள் சுத்தம் செய்தல், சனிக்கிழமை ரூட்மார்ச் என்னும் குறைந்தது 5 கி.மீ நடையாகச்சென்று திரும்புதல். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்தல். இது வழக்கமாக நடைபெருவது.இது இல்லாமல் எந்த நேரத்திலும் தயார் நிலையில் ஒரு பிறிவு இருப்பது.

ஆயுதப்படை காவலர்கள் சேரும்போது 10 வது படித்திருக்க வேண்டும், உயரம் 168 செ.மீ.க்கு மேல் இருக்க வேண்டும், மார்பளவு 80-86 செ.மீ. இருப்பதுடன் 5 செ.மீ. மார்பு விரிய வேண்டும். வயது 18க்கு மேல் இருக்கவேண்டும். உடல் தகுதி தேர்விலும் எழுத்துத் தேர்விலும். தேரவேண்டும். பின் மருத்துவப் பரிசோதனை முடித்து கோவை அலலது வேலூரில் காவலர் பயிற்சிப் பள்ளியில் 10 மாதம் பயிற்சி பெற்று முடித்து மாவட்டத்தில் வந்து ஆணை பெற்று ஆயுதப்படையில் அமர்த்தப்படுவார்கள். ஆயுதப்படை அலுவல் அனைத்தும் செய்யவேண்டும். பின் சீனியாரட்டிப் படி பரிசோதனை, தேர்வுகள் வைத்து பதவி உயர்வு அளிக்கப்படும். ஆனால் கேட்டகிரி ஒன்றுக்கு சீனியாரிட்டிப்படி காவலர்களாக மாற்றப்படுவார்கள். அதற்கு 5 அல்லது 10 ஆண்டுகள் கூட ஆகலாம். இவ்வாறு காவலர்கள் மட்டுமே தாலூக்கா போலீசுக்கு மாற்றப்பட்டனர் மற்ற அதிகாரிகள் மாற்றப்படவில்லை. அதனால் ஆயுதப்படையில் பணிபுறிந்த அதிகாரிகள் அங்கேயே பதவி உயர்வு பெற்று ரிசர்வ் இன்ஸ்பெக்டர், டெபுடி சூப்பிரிடெண்ட் ஆயுதப்படை மற்றும் எடி.எஸ்.பி. ஆயுதப்படை, மற்றும் மாநகரக்காவலில் மட்டும் டெப்பிடி கமிசனர் ஆயுதப்படை என பதவி உயர்வு கொடுக்கப் பட்டது அதற்கு மேல் ஆயுதப்படையில் பதவி உயர்வு கிடையாது. ஆயுதப்படைக்கென்று உயர் அதிகாரரகள் அமைக்கப்படவில்லை. அதனால் அவர்கள் நலன்கள் ஆராய்ந்து முடிவெடுக்க யாரும் இல்லை. இடைவிடாத அலுவலால் குடும்ப நலன் பார்க்க முடியாத தால் அல்லல் பட்டனர். இதனால் ஒன்று பட்டு போராடினர் குறைகளைச் சொல்ல சங்கம் கேட்டனர். அதே சமயம் கேட்டகிரி ஒன்றிலிருந்து தண்டனையக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த ஏற்ற தாழ்வுகள் ஏன்
ஒழுங்கு படுத்த கேட்டகிரிகள் அகற்றி காவல் என்பது ஒரே நிலை என மாற்றங்கள் செய்ய 3வது போலீஸ் கமிசன் குழு இவைகளை நன்கு ஆராய்ந்து செயல் பட வேண்டும். காவல் துறையில் மறுமலர்ச்சசயை ஏற்படுத்த வேண்டும்.


அடுத்து ஆயுதப்படையின் அலுவல் பற்றி தொடரும்.