Wednesday, June 12, 2013

மாவோயிஸ்டுகளை ஒடுக்க விஜயகுமார் ஐ.பி.எஸ்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்க மீண்டும் வந்தார் விஜயகுமார்!

Posted Date : 12:01 (12/06/2013)Last updated : 12:27 (12/06/2013)
புதுடெல்லி: சந்தன கடத்தல் வீரப்பனின் கொட்டத்தை ஒடுக்கி வனப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்திய முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாருக்கு மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழக போலீஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை தமிழக-கர்நாடக எல்லையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பிடிபடாமல் ஏராளமான கொலை மற்றும் சந்தன கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட வீரப்பன் உள்பட அவரது கூட்டாளிகளை சுட்டுக் கொன்றது.

இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டார் விஜயகுமார். 2010ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டைரக்டர் ஜெனரல் ஆன விஜயகுமார், பணி ஓய்வு பெற்ற பின்பு 2012ஆம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் முதன்மை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தற்போது, ஜார்க்கண்ட் மாநில கவர்னரின் ஆலோசகராக இருந்து வருகிறார்.

தற்போது, விஜயகுமாரை மத்திய அரசு மீண்டும் டெல்லிக்கு அழைத்துள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படைக்கு தலைவராக நியமிக்கப்பட உள்ளார். தற்போது சத்தீஷ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் பரவி வருகிறது.

சமீபத்தில் சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்டுகள் பிரச்னை மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. அதை ஒழித்தாக வேண்டும் என்ற முடிவில் மத்திய உள்துறை அமைச்சகம் இருக்கிறது. எனவே தான் வீரப்பன், அவரது கூட்டாளிகளை வேட்டையாடி வனப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்திய விஜயகுமாருக்கு மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.

தற்போது மீண்டும் உள்துறை அமைச்சக பணிக்கு வந்து மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் படைக்கு தலைவராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மிக்க நன்றி-ஆனந்த விகடன் செய்தி.
 
(தொடரும்.)

No comments:

Post a Comment