Monday, February 4, 2013

நம் சிந்தனைக்குச் சில வரிகள்.


வேலு, என்.கே. ADSP, Retd.,


நம் சிந்தனைக்குச் சில வரிகள்.

வெய்யிலில் வேகாவிட்டால் நிழல் சுவைக்காது.
உக்கிரமாக உழைக்காவிட்டால் ஓய்வு இனிக்காது.

சுற்றிச் சுற்றித் திரிந்து சுறுசுறுப்பாய் இயங்கும் வரை நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கெல்லாம் சுமைதாங்கி.
சோர்ந்து சுணங்கி முடங்கிவிட்டால் நாம் நம் சுற்றங்களுக்கே சுமையாவோம்.
சுமைதாங்கிகள் நமக்குச் சுகம் தரும் பட்டுத் தொட்டில்கள்.
சுமைகளோ நம் சலிப்பு சங்கடத்தின் முள்பதித்த கல் கட்டில்கள்.

காலமெல்லாம் கடலைக் கட்டிக்காக்கிறது கரை. ஆனால், கடலின் அலையோ-அதை அழித்தே தீர்வதென்று அல்லும் பகலும்
அணி அணியாய் வந்து ஓங்கி எழுந்து ஓங்காரக் கூச்சலிட்டு
ஊழிக்கூத்தாடி ஆர்பரித்து அலைக் கழித்து ஆக்ரோஷமாகத் தாக்கி
அழிக்க முயல்கிறது.

ஆனால், கரைகள் கரைவதில்லை.. கடற்கரைகள் மறைவதில்லை.
சூறாவளிச் சுனாமிகள் கூடச் சுணங்கி முடங்கி அடங்கி ஒடுங்கி
அமைதியாகி விடுகின்றன.

நீதி, நியாயம், தர்மம், மனசாட்சி என்பவைகள் மனிதகுலத்தின் மகத்தான அரண்கள். எக்காலத்திலும் சுடர்விட்டு ஒளி கக்கும் சூரியன் போன்றவைகள். அவைகள் சாஸ்வதமானவை. அழிவதில்லை.
ஒட்டு மொத்த மனித சமுதாயத்தில்  ஒரு சில சதவீதத்தினர் மட்டும்
அவ்வப்போது அதர்மங்களில் திளைத்து அக்கிரமங்கள் செய்து அசுரவளர்ச்சியடைந்து ஆர்பரித்து அகங்கார போதையில் ஆணவ
மமதையில் அதிகாரம் செய்து ஆட்சி நடத்துவார்கள். அது அத்தனையும் தற்காலிகங்கள் என்பதற்கு சரித்திரமே சாட்சி. அவர்கள் செயல் அத்தனையும் மனித குலத்துக்கே எதிரான மாபாதகங்கள்
.அவைகளுக்கு எந்த மத மார்க்கத்திலும் மன்னிப்பு என்பதே கிடையாது.
அவர்கள் அனைவரும் மனித குணத்தை இழந்துவிட்ட மிருகங்கள்.
அவர்களின் அதர்மங்கள், அக்கிரமங்கள், அராஜகங்கள், ஆர்பரிப்புகள்,
அடாவடிகள், அகங்காரங்கள், அதிகாரங்கள் அனைத்தும் ஆதவன்
ஒளியில் தோன்றி மறையும் வானவில் போன்றவை. வந்து நின்று
வர்ணஜாலம் காட்டி மறையும் வானவில்கள் சுடர்விட்டு எரியும்
சூரியனை அழித்து விட முடியாது. வானவில்கள் நிலைப்பதில்லை.
சூரியன் மறைவதில்லை.

ஊழல் ஒழிய வேண்டும் என்பது ஒவ்வொரு உத்தம மனிதனின் உள்ளக்கிடக்கை. ஆனால், அதற்கு ஆயிரம் எதிர்ப்புகள், ஏகாடியங்கள்,
இன்னல்கள், இம்சைகள், இடஞ்சல்கள். ஊழல் எதிர்ப்பு ஒருபோதும்
உறங்கிவிடுவதில்லை. உழைத்தே வாழும் ஒவ்வொரு மனிதனின்
உள்ளத்திலும் உக்கிரமாய் கனல் விட்டுக் கொண்டிருக்கும் அனல். அது
என்றாவது ஒரு நாள் எரிமலையாகி ஊரைக் கொள்ளையிட்டு, உண்டு கொழுத்து ஊறித்திளைக்கும் ஊழல் பேய்கள் அத்தனையையும்
ஒட்டு மொத்தமாகச் சுட்டுப் பொசுக்கி சுடுகாட்டுக்கு அனுப்பி விடும்.
இது நிச்சயம் நடக்கவிருக்கும் சத்திய நிகழ்வு.

சோம்பித்திருயேல். சொல்லிவைத்தார்கள் பெரியோர்கள். சோம்பல் ஒரு நோய். அது சுறுசுறுப்பாய் இயங்கும் ஒரு மனிதனைச் சுணக்கி முடக்கிவிடும். சோம்பேறித்தனம் ஒரு தொற்று நோய்.  மற்ற நோய்கள் மற்றவர்களைத் தொட்டால் தான் தொற்றும். ஆனால், சோம்பலோ-அதில் சுகம் காணும் சொகுசுகளைப் பார்த்தாலே பற்றிக் கொள்ளும்.
சோம்பல் நோயின் விளைவுகள் விபரீதமானவை. சோம்பல் நோயாளியின் சுறுசுறுப்புச் சுணங்கி விடும். தொழில் பணவசதி படுகிடையாகிவிடும். இறுதியில் அவன் ஒரு நடை பிணம். அல்லது கிடைபிணம்.

நம் அமைதியும் அடக்கமும் கைநழுவப்பட்டால்
ஆற்றலும் ஆக்கமும் நம்மைக் கை கழுவி விடும்.

கருணைமிக்க கடவுளால் படைக்கப்பட்டு, இரக்கமற்ற மனிதனால்
கொலை செய்யப்பட்ட வாயில்லா பிராணிகளுக்கு
போஸ்ட் மார்ட்டம் நடக்குமிடம் அடுப்பங்கரை
அடக்கம் செய்யப் படும் மயானம் மனித வயிறு.

சிந்தனையாளர்- வேலு என்.கே. ADSP Retd. 

---------------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment