Tuesday, September 9, 2014

ரம்யா பாரதி I.P.S ஆனது எப்படி?




நான் ரம்யா பாரதி I.P.S ஆனது எப்படி?
''முதலில் உங்கள் இலக்கை முடிவு செய்யுங்கள். ரோல் மாடல்களாக இரண்டு மூன்று பேரை மனதில் வைத்து உழைக்கத் தொடங்குங்கள். தணியாத ஆர்வமும் கடின உழைப்பும் தோல்விப் படியில் கால்வைக்காமல் முதல் முயற்சியிலேயே உங்களை வெற்றிச் சிகரத்தை எட்டவைக்கும்!''- ரம்யா பாரதியின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தன்னம்பிக்கை மினுமினுக்கிறது. 21 வயதிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்ற தமிழகத்தின் இளம் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி. தற்போது ஓசூர் ஏ.எஸ்.பி.
''அப்பா ராமையா ஐ.ஏ.எஸ்., தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தின் தலைவர். அம்மா வள்ளி, சமூக நலத் துறை அதிகாரி. அண்ணன் அருண்பிரசாத், வருமானவரித் துறையில் உதவி ஆணையர். அண்ணி சந்தியா அருண், அண்ணா பல்கலைக்கழக இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, இன்ஃபோசிஸில் பணிபுரிகிறார். இதுதான் என் குடும்பம்.
அப்பா, அம்மா போலவே அரசாங்க உயர் பதவியில் அமர வேண்டும் என்று நானும் அண்ணனும் சின்ன வயதிலேயே முடிவெடுத்தோம். சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராக நிறைய நேரம் தேவைப்படும் என்பதாலேயே, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.ஏ. சோஷியாலஜி படித்தேன். 2006-ல் டிகிரி முடித்தபோது எனக்கு 20 வயது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் குறைந்தபட்ச வயது வரம்பு 21. அதனால், ஒரு வருடம் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்காகத் தயாரானேன். 2007 மே மாதம் முதல்நிலை தேர்வு, 2008-ல் முதன்மைத் தேர்வு, தொடர்ந்து நேர்முகத் தேர்வு என முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ்., ஆனேன். அண்ணனுக்கு ஐ.ஆர்.எஸ் கிடைத்தது.
என்னிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். 'பயிற்சி வகுப்புகளுக்குக்கூடப் போகாமல், முதல் முயற்சியிலேயே எப்படித் தேர்வானீர்கள்?’ பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்தால்தான் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் தேர்ச்சி அடைய முடியும் என்பதெல்லாம்தவறான கற்பிதங்கள். பயிற்சி வகுப்பு பலன்கள் 10 சதவிகிதம்தான். 90 சதவிகித வெற்றிக்கு நமது உழைப்புதான் காரணம்.
நான் பிரபலமான பயிற்சி வகுப்புகள் அனைத் தில் இருந்தும் கேள்வித்தாள், பாடப் புத்தகங்களை வீட்டுக்கே வரவழைத்துப் படித்தேன்.
நான் நேர்முகத் தேர்வு என்று எதிர்கொண்ட முதல் தேர்வே, சிவில் சர்வீஸ் இன்டர்வியூதான். மிகவும் கடினமான நேர்முகத் தேர்வு. ஆனாலும், திருப்திகரமாகப் பதில் அளித் தேன். நிச்சயம் தேர்வாகிவிடுவேன் என்று தெரியும். ஆனால், சொந்த மாநிலத்திலேயே ஐ.பி.எஸ்., கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இத்தனைக்கும் பள்ளியில் நான் சராசரி மாணவிதான். ஆனால், என் குறிக்கோள் என்ன என்பதில் தெளிவாக இருந்தேன். எனது பலம், பலவீனம் தெளிந்து அறிந்து திட்டமிட்டுப் படித்தேன்.
ஒரு நாளில் 18 மணி நேரம் படிப்பேன். மீதமுள்ள நான்கு மணி நேரத்தில்தான் தூக்கம் உள்ளிட்ட மற்ற வேலைகள். படபடப்பு, பரபரப்புக்கு இடம் தரவே இல்லை. 'சூப்பரா படிக்கிறோம்ல’ என்ற பரவச நிலையும் கிடையாது. வெறியோடு படித்தேன். நான் வீட்டில்தான் தங்கி இருக்கிறேன் என்பதையே அக்கம்பக்கத்தினர் மறந்துபோகும் அளவுக்கு ஒரு வருஷம் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்து படித்தேன். அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் செல்லும்போது, வீட்டை வெளியில் பூட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள். பாடம் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறும் சமயம் தவிர, மற்ற நேரங் களில் செல்போனை அணைத்தே வைத்திருப்பேன். சுற்றிலும் மனிதர்கள் இருந்தும் தனித் தீவில் இருப்பது போல இருந்தேன். நண்பர்களைப் புறக்கணித்தேன். என் வயதுக்கே உரிய அத்தனை சந்தோஷங்களையும் தியாகம் செய்தேன். என்னைப்போல ஆசை ஆசையாக வேறு யாரேனும் பாடத்தைப் படித்திருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
தேர்வுகளுக்குப் படிக்கத் தொடங்கும் முதல் சில வாரங்கள் எரிச்சலாகவும், மலைப்பாகவும் இருக்கும். ஆனால், அதிலேயே தீவிரமாக நமது மனதைச் செலுத்தும்போது, அது உங்களுக்குப் பிடித்த தனி உலகம் ஆகிவிடும். வரலாறு, புவியியல் உள்ளிட்ட பாடங்களைப் படிக்கும்போது, நம் நாட்டைப்பற்றி நமக்குத் தெரியாமல் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற உற்சாகம் நம்மைப் பற்றிக் கொள்ளும். தேர்வில் தேறினாலும் தேறாவிட்டாலும்கூட அந்த ஒரு வருடப் படிப்பு நம் வாழ்க்கை முழுமைக்கு மான உரமாக, வரமாக இருக்கும். அடக்கமானஅமைதி நிலைக்குச் செல்வோம்.
நம்மை நாமே முழுவதுமாக அறிந்துகொண்டால்தான் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற முடியும். நேர்முகத் தேர்வு விண்ணப்பத்தில் 'உங்கள் சொந்த ஊர், பிடித்தது, பிடிக்காதது, விளையாட்டு’ என நம்மைப் பற்றிக் கேட்டிருப்பார்கள். நேர்முகத் தேர்வில் நம்மிடம் கேட்கப்படும் கேள்விகள், நாம் குறிப்பிட்ட விஷயங் களைச் சுற்றியே அமைந்திருக்கும். என்னிடம், 'உங்கள் ஊரில் சினிமா நட்சத்திரங்களின் மீது அதிக மோகம் கொண்டுள்ளீர்களே?’ என்று கேட்டார்கள். 'ஆமாங்க, இப்படித்தான் வீணாப்போறாங்க’ என்று பதில் சொல்லிஇருக்கலாம்தான். ஆனால், வருங்காலத்தில் ஒரு அரசை நடத்தும் பொறுப்புக்கு வருபவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கக் கூடாது என்பதால், 'மோகம் உண்மைதான். ஆனால், அதனால் விளைந்துள்ள நன்மைகளும் ஏராளம். தமிழர்கள் எதையும் ரசிப்புத்தன்மையோடு பார்ப்பார்கள்!’ என்றேன். என் பதில் அவர்களுக்குப் பிடித்திருந்தது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு மட்டுமல்ல; வாழ்க்கையின் எந்தத் தேர்விலும் வெற்றிபெற கடின உழைப்பு, ஈடுபாடு, நேர்மறை எண்ணம் ஆகிய மூன்று தோழர்கள் போதும்!''
என்றும் உங்களுடன்
ஆர்.முத்துராஜ்
www.facebook.com/muthurajtsi
-----------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment