Sunday, October 3, 2010

எடுபிடி போலீஸ்.


தமிழக அரசின் உத்திரவை மீறி, போலிஸ் அதிகாரிகளின் வீடுகளில் எண்ணற்ற போலீசார் எடுபிடி வேலையில் ஈடுபட்டுள்ளனர். மிடுக்கான சீருடை அணிந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டிய போலீசார், வேலைக்காரர் போன்று சமையல், தோட்ட பராமரிப்பு, நாய் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளைச் செய்வது, போலீஸ் துறையின் கம்பீரத்திற்கு அவமானம்.

தமிழக போலீஸ் உயரதிகாரிகள் வீடுகளில் சமையல் வேலை தோட்ட பராமறிப்பு, கடைகளுக்குச் சென்று வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிவருதல், அதிகாரிகளின் வாரிசுகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல் வேறு எடுபிடி வேலைகளை கவனிக்க, ஆர்டர்லி முறை முன்பு நடைமுறையில் இருந்தது.

சீருடை அணிந்து மக்களின் பாதுகாப்புக்காக பணியாற்ற வேண்டிய போலீசார், ‘மப்டி’ யில் அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை செய்வது காவல் துறைக்கே இழுக்கு எனக் கருதிய தமிழக அரசு, 20 ஆண்டுகளுக்கு முன்பே இம்முறையை அடியோடு ஒழித்து உத்திரவிட்டது. எனினும், இந்த ‘ஆர்டர்லி’ போலீசார் அதிக அளவில் பதுங்கியுள்ளனர்.

ஒரு லட்சத்திற்கு அதிகமான போலீசார் பணியாற்றும் தமிழகத்தில், ஏறத்தாழ 5,000 போலீசார் ‘ஆர்டர்லி’ களாக உயரதிகாரிகள் வீட்டில் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது கோவையும் இதற்கு விதிவிலக்கல்ல. கோவையிலுள்ள போலீஸ் உயரதிகாரிகளின் வீட்டில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சமையல் காரராக வேலைசெய்து வருகிறார்.

இவர் ஏட்டாக காலம் தொட்டே இவ் வேலையை செய்தார். தற்போது, சிறப்பு ‘எஸ்.ஜ.’, யாக பதவி உயர்வு பெற்ற பின்னரும் கூட, அதே சமையல் வேலையை தான் கவனிக்கிறார், இவருக்கான அரசு ஊதியம் மாதம் 20 ஆயிரம் ரூபாய்.

மற்றொரு அதிகாரி வீட்டில் தோட்ட பராமரிப்பு, நாய் வளர்ப்பு உள்ளிட்ட வேலைகளில் போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

தவிர நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளிலும் எண்ணற்ற போலீஸ்சார் எடுபிடி வேலை பார்க்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கான்ஸ்டபிள்கள். போலீஸ் ஸ்டேசன்களில் பணியாற்றுவதாக ஆவணக்குறிப்புகளில் பதிவாகியுள்ள போதிலும், பல ஆண்டுகளாக அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி வேலை செய்கின்றனர்.

உயரதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றுவதன் மூலமாக பல சலுகைகள் கிடைத்தாலும், அன்றாட போலீஸ் பணிச்சுமையிலிருந்து விடுதலை கிடைப்பதாலும், பலரும் ‘ஆர்டர்லி’ வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் பொறுப்பற்ற வேலையால் போலீஸ் ஸ்டேசன்கள், ஆள்பற்றாக் குறையால் திணறுகின்றன.

கிராமங்களுக்கு ரோந்து செல்லுதல், இரவு நேரங்களில் ‘பீட்’ செல்லுதல், மக்களுகுகான அன்றாட பாதுகாப்பு உள்ளிட்ட அன்றாட பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது. போலீஸ் பணியே மேற்கொள்ளாமல் அதிகாரிகளின் வீடுகளில் பதுங்கி எடுபிடி வேலை செய்யும் போலீசாருக்கு, மாதம் தலா 15 ஆயிரம் ரூபாய்வரை அரசு ஊதியம் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் விரயமாகிறது.

மேலும், பாதுகாப்பு பணி தொடர்பாக இப்போலீசார் முன்பு பெற்ற துறை சார்ந்த பயிற்சி, நடைமுறை அனுபவம் மற்றும் சட்ட அறிவும் மங்கி வருகிறது. இந்நிலை நீடித்தால் எதிர் காலத்தில் இவர்களால் போலீஸ் பணியே மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.

வழிகாட்டும் மாநகர போலீஸ் கோவை மாநகர போலீஸ்: கமிஷனராக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பின், ஆர்டர்லி போலீசாரில் பெரும் பாலானோர் போலீஸ் பணிக்கு விரட்டப்பட்டனர். இவர்கள் முன்பு, கமிஷனர் வீட்டில் டிரைவர் பணி, தோட்டப்பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளை கவனித்து வந்தனர். சைலேந்திரபாபு பொறுப் பேற்றதும் இப்போலீசார், போலீஸ் பணிக்கு அனுப்பப் பட்டனர்.

இதன் மூலம் 15 போலீசார், பணிக்குத் திரும்பினர். அதே போன்று, தனக்கு கீழ் பணியாற்றும் மற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் இருந்த போலீசாரையும் கமிஷனர் விடுவித்தார்.

கமிஷனரின் இந்த நிடவடிக்கையை போன்று, மற்ற போலீஸ் உயர் அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால், போலீஸ் ஸ்டேசன்களில் நிலவும் ஆழ் பற்றாக் குறை பிரச்சனைக்கு ஓரளவேனும் தீர்வு ஏற்படும்.

(நன்றி தினமலர்)

--------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment