Friday, April 24, 2009

மனித நேயம்


தினமலர்-கோவை தேதி 23-4-2009 ல் காவல் துறை உயரதிகாரி திரு சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். சொன்னது.

இரவு 10 மணிக்கு, முகப் பேரிலிருக்கும் என் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். மதுரவாயல் அருகே வந்துகொண்டிருக்கும் போது, சாலையோரம் ஒரு கூட்டம். என்ன வென்று காரை நிறுத்திப்பார்த்தால், ஒரு மனிதர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அப்போதுதான் அந்த விபத்து நடந்திருக்கிறது.

டிரெய்லர் லாரி அடித்து, இழுத்துக் கொண்டு போனதில் அவருக்கு பலத்த காயங்கள். கால் துண்டாகி தொங்கிக்கொண்டிருந்தது. சுற்றியிருப்பவர்கள் யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. நான் உடனே ஆம்புலன்சுக்குப்போன் செய்தேன். அடிபட்டவர், தான் ஒரு வக்கீல் என்று மெல்ல சொன்னார். நிமிடங்கள் ஓடின. ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆட்டடவை நிறுத்தி, அடிபட்ட வக்கீலைத் தூக்கிப் போட்டு, உடன் என் கான்ஸ்டபிளையும் ஏற்றினேன். நான் காரில் முன்னே பைலட் போல செல்ல, ஆட்டோ பின்னால் வேகமாக வந்தது. அதற்குள் மருத்துவ மனைக்கு தகவலைச் சொல்லி விட்டேன்.

அங்கே போய்வக்கீலை ஐ.சி.யு. வில் சேர்த்தோம். அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. இன்னொரு பெரிய மருத்துவமனையில் அந்த அரியவகை ரத்தம் இருப்பதை அறிந்து, அந்த மருத்துவ மனைக்கு விரைந்தோம். அங்கே சென்ற போது இரவு இரண்டு மணி. இதற்கு இடையே அந்த வக்கீல் வீடிற்குத் தொடர்பு கொண்டுதகவல் கொடுத்தோம்.

மொத்தம் எட்டு ஆப்பரேசன் செய்தால் தான் காலைக் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை. நிறைய ரத்தம் வேண்டி இருந்தது. சில பேருக்கு மட்டுமே இருக்கும் அந்த அரிதான,’ஏ’ நெகடிவ் வகை குரூப் கொண்ட விஜயகுமார் என்ற காவலர் சத்தியமங்கலத்தில் இருப்பது எனக்குத் தெரியவந்தது.

உடனே அவரை சென்னைக்கு வரச்சொன்னேன்.அதே போல், இங்கே சிட்டிபாபு என்ற காவலரையும் வரச்சொன்னேன். அவர்களும் காலையிலேயே வந்து விட்டனர். பிறகு, ஆப்பரேஷன் செய்து அவரது உயிரையும், காலையும் காப்பாற்றினோம். மனிதனுக்கு மனிதன் உதவி வாழ்வதுதான் வாழ்க்கை.

--------------------------------------(காவல் தொடரும்)
---------------------------------------------------------------------------

Saturday, April 11, 2009

சென்னை கலவரம்-வக்கீல் சஸ்பெண்டா?


6. சென்னைக் கலவரம் பற்றி முன்னாள் காவல் அதிகாரிகள் சங்கம், கோவை 21-3-2009 அன்று தினத் தந்தியில் அளித்த அறிக்கையின் நகல்.

சென்னையில் கலவரத்தில் ஈடுபட்ட
வக்கீல்களின் தொழில் உரிமத்தை
‘சஸ்பெண்டு’ செய்ய வேண்டும்

முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறித்தல்

கோவை, மார்ச்.21- சென்னையில் கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களின் தொழில் உரிமத்தை ‘சஸ்பெண்டு’ செய்ய வேண்டும் என்று, முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக கோயமுத்தூர் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்க செயலாளர் என்.கே.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

போலீஸ் நிலையம் தீக்கிரையான சம்பவம்

கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் நடந்த கலவரம் சம்பந்தமாக ஏற்கனவே இடம் மாற்றி பணியமர்த்தப்பட்டு இருந்த 2 போலீஸ் அதிகாரிகளை சம்பவத்தின் போது சரிவர பணி புரியவில்லை என்ற காரணத்திற்காக தற்காலிக நீக்கம் (சஸ்பெண்டு) செய்யவும், ஏனைய வரம்பு மீறிய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்திரவிட்டுஉள்ளது. அதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறெந்த மார்க்கமும் அந்த அலுவலர்களுக்கு இல்லை. அவர்கள் அந்த தண்டனைக்குறிய குற்றங்களைச் செய்துள்ளனர் என்று ஐகோர்ட் கருதினால் அதை அவர்கள் அனுபவிக்கட்டும்.
ஆனால் அதே பிப்ரவரி மாதம் 19- ந்தேதி வன்முறையில் இறங்கிய வக்கீல்கள் குழு ஒன்று ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொழுத்தியது. காவல் நிலையம் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ்காரர்களுக்கு சொந்த மான வாகனங்களை தீக்கிரையாக்கியது. போலீஸ் துறையினரையும், தீயணைப்பு படையினறையும் தாக்கியது. மேலும் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தியது. இவை அனைத்தும் ஊர் அறிந்த நிகழ்வுகள்.

முன்னாள் மந்திரி மீது
முட்டை வீச்சு

அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஒருவர் , கோர்ட்டு ஹாலுக்குள் 2 நீதிபதிகள் முன் ஆஜராக இருந்தபோது வக்கீல்களில் ஒருசிலர் அவரை ஆபாசமாகத்திட்டி அழுகிய முட்டையால் அடித்து ஆர்ப்பாட்டம் செய்து அசிங்கப்படுத்தினார்கள். அதை தடுக்க குறுக்கிட்ட போலீஸ் துறையினரையும் தாக்கினார்கள். அதற்கு முன்பாக ஒரு போலீஸ் அதிகாரியைப்பிடித்து சீறுடையை களையச் செய்து அவமானப் படுத்தினார்கள். அரசுத் தரப்பு வக்கீல் அலுவகத்தில் பணி நிமித்தமாக வருகை தந்த போலீஸ் அதிகாரி ஒருவரை காரணமின்றி தாக்கி காயப்படுத்தினார்கள். கடந்த சில காலமாக ஐகோர்ட்டு வளாகத்திற்குள் ஊர்வலங்கள், கொடும்பாவி எரிப்பு, ஆர்பாட்டங்கள், ஆக்ரோஷ கோஷங்கள், ஆபாச சொற்பொழிவுகள், பலவந்தங்கள், பயமுறுத்தல்கள், சண்டைகள், சவால்கள், மறியல், புறக்கணிப்பு, உண்ணாவிருதம், பணிசெய்யும் வக்கீல்களை பலவந்தப்படுத்தி வெளியேற்றுதல் போன்ற பல வகையான விதிமுறை மீறிய செயல்களை செய்து நீதிமன்ற அலுவல்களை காலவறையின்றி முடக்கி வைத்தனர். இந்த ஆண்டு மட்டும் 77 நாட்களில் 66 நாட்கள் ஐகோர்ட்டு பணிகள் முடக்கப்பட்டன. பிப்ரவரி 19 கலவரம் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்குழு அறிக்கையை பகிரங்கமாக தீவைத்துக் கொழுத்தி சுப்ரீம் கோர்ட்டையே வக்கீல்கள் குழு ஒன்று அவமதித்து, சுப்ரீம் கோர்ட்டு, ஐக்கோர்ட்டு, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் சேவை அமைப்பினர் விடுத்த உருக்கமான வேண்டு கோள்களை உதாசீனப்படுத்தி, கோர்ட்டு அலுவல்களை மாதக்கணக்ககல் நடைபெறாமல் முடக்கி வைத்து நீதித்துறைக்கும், அரசுக்கும் அபரிமிதமான கால நஷ்டத்தையும் பொருள் நஷ்டத்தையும் கவுரவ நஷ்டத்தையும், ஏற்படுத்தினார்கள்.

உரிமத்தை சஸ்பெண்டு
செய்ய வேண்டும்.

அனைத்து குடிமக்களின் வரிப்பணத்தில் அவர்களது சேவைக்காக இயங்குவது நீதித்துறை. அதை நடக்க விடாமல் முடக்கிவைப்பது மக்களுக்கு எதிரான சட்ட விரோத, சமூக விரோத, தொழில் தர்மத்திற்கு எதிரான தார்மீகமற்ற செயல். மக்களால் மன்னிக்க முடியாத இத்தனை குற்றங்களையும் செய்தவர்கள் யார்-யார்? என்பது தெள்ளத்தெளிவாக எல்லா ஊடகங்களிலும், போட்டோக்களிலும், வீடியோக்களிலும் பதிவாகி சாட்சிகளாக உள்ளன. அவர்கள் யார்-யார்? என்பதை கண்டறிவதில் எந்த சிரம்மும் இல்லை.

அவர்கள் யார்-யார்? என்பதை கண்டறிந்து போலீஸ் அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்த்து போல், சம்பந்தப்பட்ட வக்கீல்களின் தொழில் உரிமத்தை உடனடியாக தற்காலிக நீக்கம் செய்து சகல சட்டப் படியான நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் செய்த அத்தனை குற்றங்களையும் உரிய தண்டனைக்கு உள்ளாக்க ஐகோர்ட்டு தன்னிச்சையாக உத்திரவிட்டு நீதியின் முன் எல்லோரும் சமம், என்கின்ற சத்தியத்தின் கட்டளையை நிலை நிறுத்த வேண்டும் என்ற இந்த மாநிலத்தின் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

--------------------------------------(காவல் தொடரும்)