"போலீஸ் லத்தி- சார்ஜ் செய்வது சரிதானா ?"
"போலீஸ் லத்தி- சார்ஜ் செய்வது சரிதானா ?" ஓய்வு போலீஸ் ஐ.ஜி.ராமநாதனிடம் கேட்டோம்.
ஓய்வு போலீஸ் ஐ.ஜி.ராமநாதன்
"போலீசாரை லத்தி சார்ஜ் செய்ய வேண்டாம் என்று தடுத்து விட்டால் அதற்காக முதலில் சந்தோஷப்படும் ஆள் நானாகத்தான் இருப்பேன். அதே போன்ற சந்தோஷம் ஒவ்வொரு போலீசாருக்கும் இருக்கும். நாங்கள் ஏன் பொதுமக்களை அடிக்க வேண்டும்.அவர்களுக்கும் எங்களுக்கும் ஏதாவது முன்விரோதமா.
கட்டமைக்கப் பட்ட ஒரு அரசியல் சட்ட அமைப்பை மீறி பொது இடத்தில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூடி, கலவரம் விளைவித்து, பொது சொத்துக்களை சேதப்படுத்தி விட்டு செல்கிற யாவரும் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளே. அப்படி அசம்பாவிதம் நடக்காத வண்ணம்தான் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட இடத்தில் போலீசை போடுகிறார்கள். போலீஸ் பாதுகாப்பை மீறிக் கொண்டு சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறவர்களை அதற்கு முன்னதாகவே தடுத்திட வேண்டிய பொறுப்பு போலீசுக்கு இருக்கிறது. அப்போதுதான் பொதுச் சொத்து காப்பாற்றப்படும், பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படாமல் தடுக்கப்படும். இதில் போலீசாரின் சொந்த விருப்பு, வெறுப்பு எங்கிருந்து வந்தது.
ஒரு தொழிற்சங்கப் போராட்டம் நடக்கிறது என்றால், அங்கே பாதுகாப்புக்காக இருக்கிற போலீசார், உரிமைகேட்டு போராடும் அந்த தொழிற்சங்கவாதியையும் பாதுகாக்க வேண்டும், கதவடைப்பு செய்துள்ள நிறுவனத்தாரையும் பாதுகாக்க வேண்டும். இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சூழலைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதில் போலீசார் வேலை என்ன. எந்தப் பக்கம் இருந்து இந்த வரம்பை மீறிக் கொண்டு, சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி நடக்கிறதோ, அந்தப் பக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் அவ்வளவுதான். இதில் போலீசாரின் சொந்த விருப்பு, வெருப்பு எங்கிருந்து வந்தது.
அரசின் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள், இது எந்த வகையில் சரி. எனக்கும்தான் மது பிடிக்காது, அதற்காக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று நான் சாலையில் நின்று மறியலில் ஈடுபடுவது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுதானே.
டாஸ்மாக் கடையை நடத்துவோம் என்பது ஆளும் அரசின் கொள்கை முடிவு. வாக்களித்து அதே அரசை பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்த பின், அதாவது அந்த கொள்கை முடிவை ஏற்றுக் கொண்ட பின், அந்த டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடுவது, சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வண்ணம் மறியலில் ஈடுபடுவது எந்த வகையில் சரி.இதில் போலீசாரின் சொந்த விருப்பு, வெறுப்பு எங்கிருந்து வந்தது." என்கிறார் சூடாக.
(தொடரும்) |