Wednesday, August 1, 2012

இடமாற்றத்துக்காக போலீசாரிடம் லஞ்சம்:

இடமாற்றத்துக்காக போலீசாரிடம் லஞ்சம்: போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீக்சித்துக்கு டெல்லி-ராஜஸ்தானில் சொத்துக்கள்
இடமாற்றத்துக்காக போலீசாரிடம் லஞ்சம்: போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீக்சித்துக்கு டெல்லி-ராஜஸ்தானில் சொத்துக்கள்
சென்னை, ஆக 1-

சென்னை கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த அபிஷேக் தீக்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டானார்.

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்னர் இவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை கமாண்டோ பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். மாறுதல் உத்தரவு போடப்பட்ட பின்னர், அபிஷேக் தீக்சித், கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் 87 பேரை 5 நாளில் அவசரம் அவசரமாக மாற்றியுள்ளார்.

போலீசாரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த பணியிட மாற்றத்தை அவர் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பர்கூரில் பணிபுரிந்து நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் மீது கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு பங்களா மற்றும் அபிஷேக் தீக்சித்தின் சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அவரது வீடு, சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரனின் வீடு உள்பட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், ஏராளமான தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், சிக்கின. போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீக்சித், டெல்லி, ராஜஸ்தானிலும் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் செயல்படுவதுபோல டெல்லியில், டெல்லி நகர மேம்பாட்டு ஆணையம் (டெல்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் மூலம் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு வீட்டை வாங்குவதற்காக அபிஷேக் தீக்சித் லட்சக்கணக்கான ரூபாயை அட்வான்சாக கொடுத்துள்ளார். இதேபோல ராஜஸ்தானில் சொத்துக்களை வாங்கியதற்கான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளன.

இந்த ஆவணங்கள் இந்தியில் உள்ளன. இதனை போலீசார் படித்துப் பார்த்து வருகிறார்கள். இது தவிர ஆயுள் காப்பீட்டு ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவையும் சிக்கியுள்ளன. இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிப்பதற்கே 5 நாட்களுக்கு மேலாகும் என்று சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னைக்கு மாறுதலாகி வந்த பின்னர் சூப்பிரண்டு அபிஷேக் தீக்சித், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் 2 நாட்கள் தங்கியுள்ளார். இங்கும் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டில் அவருடன் யாராவது தங்கினார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் பண்ணை வீட்டு ரகசியங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான அபிஷேக் தீக்சித் பற்றி தினமும் வெளியாகும் தகவல்களால் அவருக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். 
 
:

No comments:

Post a Comment